|
நல்ல படங்கள் தியேட்டரில் ஓடுவதில்லை
Aug 27,2008 00:00
by
admin
நல்ல படங்கள் தியேட்டரில் ஓடுவதில்லை என்று ஜெயம் ரவி கூறினார். ஜெயம்ரவி நடித்துள்ள ‘தாம் தூம்’ படம் 29&ம் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் திருட்டு வி.சி.டியை தடுக்க தமிழ் திரைப்பட பாதுகாப்பு கழகத்துடன் மீடியா குளோபல் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதுகுறித்து ஜெயம்ரவி நிருபர்களிடம் கூறியதாவது: குடும்பத்தோடு அமர்ந்து பார்க்கும் நல்ல படங்களை மக்கள் திருட்டு வி.சி.டி.யிலேயே பார்த்து விடுகிறார்கள். குடும்பத்தோடு பார்க்க முடியாத மோசமான படங்களை தனித்தனியாக தியேட்டருக்கு வந்து பார்க்கிறார்கள். ‘தாம் தூம்’ முதல் வகையை சார்ந்த படம். கோடிக்கணக்கில் செலவு செய்து உருவாக்கப்பட்டுள்ளது. அந்த படத்துக்கு திருட்டு வி.சி.டி வரக்கூடாது என்பதற்காக சில முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது அதில் இதுவும் ஒன்று. திருட்டு வி.சி.டி வெளிவந்தால் அதுபற்றி அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று என் ரசிகர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். திருட்டு வி.சி.டி.யை பார்ப்பதில்லை என்ற விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட வேண்டும். அப்படி ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். என்போன்ற இளம் நடிகர்கள் முன்வந்தால் அவர்களோடு இணைந்து பணியாற்றுவேன். பேட்டியின்போது தயாரிப்பாளர் சூரியராஜ் குமார், தமிழ் திரைப்பட பாதுகாப்பு கழக தலைவர் கே.ராஜன் உடன் இருந்தனர். |