இயக்குனர் சீமான் கூட்டத்தில் ரகளை : கல், பாட்டில் வீச்சு
Aug 25,2008 00:00 by admin

கோவையில் இயக்குனர் சீமான் பேசிய கூட்டத்தில் கற்கள் மற்றும் சோடா பாட்டில் வீசப்பட்டது.

பெரியார் திராவிடர் கழகம் சார்பில், பெரியார் பிறந்த தினத்தையட்டி கோவை கவுண்டம்பாளையத்தில் நேற்று முன்தினம் இரவு பொதுக்கூட்டம் நடந்தது. கவுண்டம்பாளையம் 7வது பகுதி பெரியார் தி.க. செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார்.

பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர் ஆறுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் இரவு 9.30 மணிக்கு சீமான் பேசிக் கொண்டிருந்தார். இந்து முன்னணியைச் சேர்ந்த சிலர் சீமானுக்கு எதிராக கோஷமிட்டு, கற்கள், சோடாபாட்டில்களை வீசி ரகளையில் ஈடுபட்டனர்.

இதில் பெரியார் தி.க.வை சேர்ந்த வெள்ளலூர் அசோக்வீதியை சேர்ந்த கோபால் (41), பாலன், ரமேஷ், ஆறுச்சாமி, தமிழ் செல்வன், இந்து முன்னணியை சேர்ந்த நகர செயலாளர் சரவணன், பொறுப்பாளர் முருகானந்தம் ஆகியோர் காயமடைந்தனர்.

அவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் ரகளையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெரியார் தி.க.வினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். துடியலூர் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம், நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் மறியல் கைவிடப்பட்டது.

பின்னர் பெரியார் தி.க. 7வது பகுதி செயலாளர் சண்முகம் கொடுத்த புகாரின் பேரில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் உருமாண்டம்பாளையம் பாலன், பொறுப்பாளர் முருகானந்தம் உள்பட 40 பேர் மீது கொலைமிரட்டல், தாக்குதல், கல்வீச்சு உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.