|
என் வசனங்களை காப்பி அடித்தார் ரஜினி : மோகன்பாபு
Aug 25,2008 00:00
by
admin
தெலுங்கு நடிகரும் ரஜினியின் நெருங்கிய நண்பருமான மோகன்பாபுவின் மகன் மனோஜ்குமார் நடிக்கும் படம் ‘என்னை தெரியுமா?’. இதில் அவருக்கு ஜோடியாக சினேகா உல்லால், ரியா சென் நடித்துள்ளனர். அஜய் சாஸ்திரி இயக்கி உள்ளார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்றுமுன்தினம் நடந்தது. இயக்குனர் வாசுவின் தந்தை பீதாம்பரம் கேசட்டை வெளியிட, பிரபு பெற்றுக் கொண்டார். சி.டி.யை ஜேப்பியார் வெளியிட, ஏ.சி.சண்முகம் பெற்றுக் கொண்டார். விழாவின் மோகன்பாபு பேசியதாவது: என்னுடை தந்தை ஆரம்பப்பள்ளி ஆசிரியர். நான் சொந்தமாக இருக்கும் நிலத்தில் விவசாயம் பார்க்க வேண்டும் என்பது அவர் ஆசை. ஆனால் நடிக்க ஆசைப்பட்டு சென்னைக்கு வந்தேன். ரஜினியும் நானும் பிளாட்பாரத்தில் வாழ்ந்து கொண்டு வாய்ப்பு தேடினோம். ஒருவேளை சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டோம். பிறகு இருவருக்கும் வாய்ப்பு வந்தது. நடிகரானோம். சிவாஜிக்கு வில்லனாக நடித்தேன். அவர் ஹீரோ என்பதற்காக என்னை அடித்தார். நான் வாங்கிக் கொண்டேன். வில்லன் என்றால் அடிவாங்கிக் கொண்டே இருக்க வேண்டுமா? ஹீரோ நான்கு அடி அடித்தால் வில்லன் ரெண்டு அடியாவது திருப்பி அடிக்க வேண்டும் என்றேன். அதற்கு ஒப்புக் கொண்டு அடிவாங்க சம்மதித்தார். ஆனால் படம் வெளிவந்தபோது அவர் என்னிடம் அடிவாங்கிய காட்சிகள் இல்லை. சினிமாவில் முதன் முதலாக பஞ்ச் டயலாக் நான்தான் பேசினேன். என்னுடைய வசனங்கள் பலவற்றை ரஜினி காப்பி அடித்து அவர் படத்தில் வைத்துக் கொண்டார். ஆனால் நான் அவர் வசனம் எதையும் காப்பி அடிக்கவில்லை. நான் தெலுங்குகாரனாக இருந்தாலும் தமிழ்நாடுதான் என் தாய்நாடு. அதை இப்போது சொல்லவில்லை 25 வருடமாகச் சொல்லி வருகிறேன். இதனால் தெலுங்குகாரர்கள் என்மீது கோபித்துக் கொண்டார்கள். அதற்காக கவலைப்படவில்லை. தமிழ்நாடுதான் எனக்கு பாலூட்டி காப்பாற்றியது. ஆந்திரா என்னை அரவணைத்துக் காத்தது. யார் வந்தாலும் வரவேற்று வாழ வைக்கிற நாடு தமிழ்நாடுதான். சில காலம் அரசியலில் இருந்தேன். அதில் வீசும் துர்நாற்றத்தை பார்த்து வேண்டாமென்று ஒதுங்கி விட்டேன். இனி மக்களுக்கு நேரடியாக சேவை செய்யப்போகிறேன். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் இயக்குனர்கள் பாக்யராஜ், பி.வாசு, அமீர், சுப்பிரமணியம் சிவா, பார்த்திபன், நடிகர்கள் சிம்பு, சிபிராஜ். பிரேம்ஜி, ஷக்தி உள்பட பலர் பேசினர். |