|
கத்தியுடன் ரகளை டைரக்டர் கைது!
Aug 18,2008 00:00
by
admin
கோயிலில் நடந்த விருந்தில் கத்தியுடன் ரகளை செய்ததாக டைரக்டர் செல்வா கைது செய்யப்பட்டார். பெரம்பலூர் அரணாரை பகுதியை சேர்ந்தவர் செல்வா என்கிற தமிழ்செல்வன் (32). இவர் தற்போது மணிவண்ணனின் மகன் ரகுவண்ணன் ஹீரோவாக நடிக்கும் ‘தமிழ்தேசம்‘ என்ற படத்தை இயக்கி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த படத்தின் படப்பிடிப்பு பெரம்பலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் செல்வாவின் உறவினர் மாரியப்பன் என்பவர், பெரம்பலூர் துறையூர் ரோட்டில் உள்ள நீலியம்மன் செல்லியம்மன் கோயிலில் கிடா வெட்டி தனது மகளுக்கு மொட்டையடித்து காது குத்தினார். பின்னர் கோயிலில் விருந்து நடந்தது. அப்போது கோயிலுக்கு வந்த டைரக்டர் செல்வா, என்னை ஏன் கிடா வெட்டு நிகழ்ச்சிக்கு கூப்பிடவில்லை என்று கேட்டு தகராறு செய்தார். அங்கிருந்த மாரியப்பனின் தம்பி ரமேஷ், மற்றும் உறவினர்கள் செல்வாவை சமாதானம் செய்தனர். ஆனால் கத்தியை காட்டி ரகளை செய்த செல்வா, சிலரை அடித்தாராம். இதில் ரமேஷ்(25), மணிகண்டன்(28) மற்றும் பலர் தாக்கப்பட்டனர். இதுபற்றி பெரம்பலூர் போலீசுக்கு ரமேஷ் தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் ஜோசப் சிரில், எஸ்.ஐ. ஜெயலட்சுமி ஆகியோர் செல்வாவை கைது செய்து பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜீவானந்தம், அவரை 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து செல்வா திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இன்னொரு கோயிலிலும் தகராறு: இரு மாதங்களுக்கு முன் பெரம்பலூர் அருகே ஆலம்பாடியில் உள்ள கோயில் திருவிழாவில் செல்வாவுக்கும், இன்னொரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் செல்வாவுக்கு முதுகில் கத்திக்குத்து விழுந்தது. அப்போது செல்வாவின் கார் அடித்து நொறுக்கப்பட்டது.
|