ஒசாமா பின்லேடன் கதை படமாகிறது
Aug 18,2008 00:00 by admin

 

ஒசாமா பின்லேடன் கதை திரைப்படமாகிறது. அதற்கான உரிமையை பல கோடி ரூபாய் கொடுத்து ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் குலூனே வாங்கியிருக்கிறார்.

அமெரிக்கா இரட்டை கோபுரத்தை தகர்த்து உலகம் முழுவவதையும் அதிர்ச்சியில் உறைய வைத்த தீவிரவாதி பின்லேடன். அவரை அமெரிக்க ராணுவம் தேடி வருகின்றது. இதுவரை பிடிக்கவில்லை. கடந்த 2001&ம் ஆண்டு, ஒசாமாவின் கார் டிரைவர் சலீம் ஹாம்டன் என்பவரை ஆப்கானிஸ்தானில் சுற்றி வளைத்து கைது செய்தது.

'ஒசாமாவின் தீவிரவாத படையில் உறுப்பினராக இருப்பதுடன், தீவிரவாத செயல்களுக்கு உடந்தையாக இருந்ததாகவும், அந்த அமைப்பின் எல்லா திட்டமும், இடங்களும் அறிந்தவர்' என்றும் ஹாம்டன் மீது அமெரிக்க அரசு குற்றம் சுமத்தியது.

ஆனால் அவருக்கு சாதகமாக வாதாடிய வழக்கறிஞர், 'ஹாம்டன் கார் டிரைவராக மட்டுமே பணிபுரிந்தார். அதைத்தவிர வேறெதுவும் தெரியாது. தீவிரவாத செயல்களில் ஈடுபடவும் இல்லை' என்றார். ஆனாலும் அமெரிக்க ராணுவ கோர்ட்டில் நடந்த இந்த விசாரணையில், 'தீவிரவாத செயல்களுக்கு ஹாம்டன் உடந்தையாக இருந்தார்' என்று தீர்ப்பு கூறியது.

உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவத்தை ஜோனாதன் மஹலெர் என்ற பத்திரிகையாளர் 'தி சேலஞ்ச்' என்ற பெயரில் புத்தகமாக எழுதினார். அதன் உரிமையைத்தான் ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் குலூனே பலகோடி ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறார். இதில், அமெரிக்க கப்பல் படையின்  கமாண்டர் கேரக்டரிலும் நடிக்க முடிவு செய்துள்ளார் குலூனே.