|
குசேலன் - திரை விமர்சனம்
Aug 01,2008 00:00
by
admin
நடிப்பு: ரஜினி, பசுபதி, மீனா, நயன்தாரா, வடிவேலு. இசை: ஜி.வி. பிரகாஷ் குமார். தயாரிப்பு: கவிதாலயா, செவன் ஆர்ட்ஸ். இயக்கம்: பி. வாசு. விமர்சனம்: கிராமத்தில் சலூன் கடை நடத்துகிறார் பசுபதி. ஏழ்மையில் வாடுகிறார். கடைக்கு நாற்காலிகூட வாங்க முடியாத நிலை. மகளுக்கு பள்ளிக் கட்டணம் செலுத்தாததால் அவள் தேர்வு எழுத முடியவில்லை. இந்த சூழலில் அந்த கிராமத்துக்கு ஷ¨ட்டிங்கிற்காக வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். அவர் பசுபதியின் பள்ளிக் கால நண்பர். அதுவரை பசுபதியின் மனைவி மீனா மட்டுமே அறிந்திருந்த இந்த உண்மை இப்போது ஊருக்கே தெரிகிறது. பசுபதியின் மகள் படிக்கும் பள்ளியின் முதல்வர் அவரது வீடு தேடி வருகிறார். மகளின் பள்ளிக் கட்டணத்தை தானே கட்டிவிட்டதாக தெரிவிக்கிறார். பதிலுக்கு பசுபதியின் உதவியை எதிர்பார்ப்பதாக சொல்கிறார். பள்ளியின் ஆண்டு விழாவுக்கு ரஜினியை அழைத்து வரவேண்டும் என்று பசுபதியிடம் கோரிக்கை வைக்கிறார். மகள் படிப்பை நினைத்து பசுபதி ஒப்புக்கொள்கிறார். ஆனால், 25 ஆண்டுகளுக்கு முன் பழகிய நண்பனுக்கு தன்னை இன்னமும் நினைவிருக்குமா? என்று தயங்குகிறார். சரி, சந்தித்து கேட்டு விடுவோம் என்று கிளம்புகிறார். ரஜினியை பார்க்க அவர் எடுக்கும் எல்லா முயற்சியும் தோல்வியில் முடிகிறது. ரஜினியை பார்த்தாரா? பசுபதியின் கஷ்டங்களுக்கு விடிவு ஏற்பட்டதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்தான் ‘குசேலன்’ கிளைமாக்ஸ். வழக்கமான ரஜினி ஸ்டைல், பஞ்ச் டயலாக், சூப்பர் ஆக்ஷன்... எதுவுமே இல்லாத படம் இது. முழுக்க முழுக்க பசுபதியின் தோளில் பயணிக்கிறது கதை. யதார்த்தமான நடிப்பால் கதைக்கு வலு சேர்க்கிறார் பசுபதி. ஆனால் அவரை சுற்றியிருக்கும் கேரக்டர்கள் அனைத்திலும் நாடகத்தனம். வடிவேலு, லிவிங்ஸ்டன், சந்தானபாரதி, எம்.எஸ். பாஸ்கர், தியாகு என்று காமெடி கூட்டமே இருக்கிறது. படத்தின் முதல் பாதியில் இவர்கள் நம்மை சிரிக்க வைக்க செய்யும் முயற்சிகளால் படம் பந்தாடப்படுகிறது. ரஜினி - பசுபதியின் நட்பை உணர்த்தும் கதைக் களத்திலிருந்து தடம் புரண்டு செல்கிறது முதல் பாதி. ரஜினியை பார்க்க முயன்று போலீசால் தள்ளிவிடப்படும் பசுபதி, கூனிக்குறுகி தள்ளாடும்போது மனதில் நிற்கிறார். ‘சூப்பர் ஸ்டாரை தெரியும் என்று பொய் சொல்கிறார்’ என ஊர் மக்கள் கிண்டலடிப்பதை கண்டு, பசுபதி மனசுக்குள் உருகும் காட்சி டச்சிங்.
குழந்தைகள், தந்தையை வெறுத்தாலும் கணவனை விட்டுக்கொடுக்காமல் வாழும் மனைவி கேரக்டரில் மீனா மின்னுகிறார். டூயட்களுக்கு உதவியிருக்கும் நயன்தாராவும் போலீஸ் அதிகாரியாக வரும் பிரபுவும் மனதில் நிற்கவில்லை. சுந்தர்ராஜன் கேரக்டர் யதார்த்தம். பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை ஒன்றவில்லை. அரவிந்த் கிருஷ்ணாவின் கேமரா, ரஜினி&பசுபதி காட்சிகளுக்கு என தனித்தனியாக கலர் காட்டியிருப்பது அழகு. படத்தின் இறுதி 20 நிமிடங்கள்தான் குசேலனின் பொக்கிஷம். அதுவரை கதையை சுமந்த பசுபதியை கூட ஓரம்கட்டிவிட்டு பார்க்க வைக்கும் கிளைமாக்ஸ். அதில் ஸ்கோர் செய்கிறார் சூப்பர் ஸ்டார். ரஜினியின் சேமிப்புக் கிடங்கில் இருக்கும் எமோஷன்களை சரியானபடி வெளியே கொண்டுவந்து கொட்ட வைத்து, பசுபதியோடு ரசிகர்களையும் கண்கலங்க வைக்கிறார் இயக்குனர் வாசு. |