|
'சுப்ரமணியபுரம்' - திரை விமர்சனம்
Jul 24,2008 00:00
by
admin
புழுதி படிந்த எளிய முகங்கள். ``டே... அங்கிட்டு இருக்காண்டா...'' என அருவாளைத் தூக்கிக்கொண்டு ஓடும் இம்சை இல்லை. டாடா சுமோ துரத்தல்கள் எதுவும் கிடையாது. 1980ம் ஆண்டுக்கான கதைக்களம் என்பதா அழகராக `ஜெய்'. புதர் மண்டிய தாடி, ஸ்டெப்கட்டிங். வெட்டி வேலை கேரக்டருக்கு மிகச் சரியான பொருத்தம். கூடவே பரமனாக டைரக்டர் சசிகுமார். நடிப்பில் இதுதான் முதல் அறிமுகமாம். வசனம் அதிகமின்றி ஓட்டத்திலும், பாவனைகளிலும் சொல்ல வேண்டியதை கச்சிதமாகச் சொல்கிறார். ரவுசுக்கு கஞ்சா கருப்பு. சித்தன் சவுண்ட் சர்வீஸ் கடையில் தண்ணியடித்து விட்டு சிகரெட் சகிதமாய் அடிக்கடி ஒன்று கூடுகிறார்கள். தெருவில் முட்டல், மோதல்கள். அந்தரத்தில் பறந்தபடியே `ஜிக்ஜாக்' வேலை காட்டும் சண்டையைப் பார்த்துச் சலித்த நமக்கு தெருவில் நடக்கும் கோஷ்டிச் சண்டையை அப்படியே படம்பிடித்துக் காட்டுகிறார்கள். போலீசுக்கு போட்டுக் கொடுத்த மொக்கைச் சாமியின் பூட்டிய வீட்டுக்கு முன்னால் கஞ்சா கருப்பு கூட்டணி அடிக்கும் லூட்டி செம ரகளை. லுங்கியை வழிய மடித்துக்கொண்டு வட்டார வழக்கில் சிலம்பம் ஆடுகிறார். படத்தில் எல்லா கேரக்டர்களுமே லுங்கியும், சட்டையுமாக வந்து மதுரையின் ஈரப் புழுதியை ஞாபகப்படுத்துகிறார்கள். நீளக்காலர் சட்டை, `தொளதொள' பெல்பாட்டம் பேண்ட் என காஸ்ட்யூம் விஷயத்தில் கூட நிறைய சிரத்தை. லேசான உதட்டுச் சுழிப்புடன் ஓரக்கண்ணால் கதாநாயகனைப் பார்த்தபடி,`ஐயோ... யாராவது பார்த்துவிடப் போகிறார்களோ' என பரிதவித்து நம்மை பரவசப்படுத்துகிறார் ஸ்வாதி. காதலியை `சைட்' அடிக்கும் பாணியும் பழைய யுக்திதான். ``நான் மட்டுமா பார்க்கிறேன். அவளுந்தான் பார்க்குறா...'' என சகாக்களிடம் பெருமையடித்துக் கொள்ளும்போது முகபாவனைகளில் ஜெயிக்கிறார் `ஜெய்'. சைக்கிளில் நண்பனை ஏற்றிக்கொண்டு காதலியை சுற்றிச் சுற்றி பின்தொடரும் காட்சி சுவாரஸ்யம். ``நாங்களும் வெளுப்பாத்தான் இருக்கோம்.... எவளும் பார்க்க மாட்டேங்கறாளே...'' என ஜெய்யிடம் சசிகுமார் புலம்புவது சரியான சலம்பல். ``கவுன்சிலரா இருக்கிற வரைக்கும் எல்லாரும் மதிச்சானுவ... இப்போ கோயில் கமிட்டித் தலைவர் பதவிகூட கிடைக்க மாட்டேங்குதே...'' என கௌரவத்துக்காக எப்போதும் மனசுக்குள் கறுவிக் கொண்டிருக்கிற ஊர்ப் பெரிசு, புதுமுகமாம். உடல் அசைவுகளிலேயே வில்லத்தனம் காட்டி அசத்துகிறார். சமார்த்திய வில்லனாக சமுத்திரக்கனி. புலம்பிப் புலம்பியே காரியம் சாதித்து வில்லத்தனத்திலும் நல்லதனமாக செய்திருப்பது சபாஷ். ``பழகினதுக்காகவே கொலை செய்யுறது நம்ம பசங்கதான்...'' என ஜெயில் வளாகத்திற்குள் சக கைதி அடிக்கும் கமெண்ட்டுகள் சரியான சாட்டையடி. யாருப்பா அந்தக் கோயில் தர்மகர்த்தா? சந்தனம் பூசிய உடம்போடு பெரிய மனிதர் செய்யும் அத்தனை கள்ளத்தனங்களையும் அப்பட்டமாக வெளிப்படுத்துகிறார். சின்ன வீடு காமெடி சரியான கூத்து. சில இரட்டை அர்த்த வசனங்களை மட்டும் தவிர்த்திருக்கலாம். `டுமுக்கா'வாக வரும் ஊனமுற்ற வாலிபர் நம்மை ரொம்பவே கவர்கிறார். முதல் பாதி இதம் என்றால் இரண்டாம் பாதி முழுக்க விறுவிறுப்பு. சாவு வீட்டில் பயந்து பயந்து காத்திருந்து கொலை செய்யும் இடத்தில் படபடப்பு எகிறுகிறது. நம்பிக் கழுத்தறுத்தவனை ஆட்டோவில் தூக்கிப் போட்டு ஆட்டை அறுப்பது போல கரகரவென கழுத்தறுப்பது மிகையான கோரம். ``அவனுங்க எனக்கு சாவு பயத்தை வர வச்சிட்டானுங்கடா...'' என பரிதவிக்கும் காட்சியில் `ஜெய்' பரிதாபத்தை அள்ளிக்கொள்கிறார். `கண்கள் இரண்டால்...' பாடல் தாளம் போட வைக்கிறது. மதுரை கொடை விழாவை மையப் படுத்தி வரும் `மதுரை..' என்ற பாடலில் கிராமத்துக் குதூகலம். இசை ஜேம்ஸ் வசந்தன். பின்னணி இசையில் தாரை, தப்பட்டை என கிராமியச் சூழலை முன் வைத்து கைதட்டல் போட வைக்கிறார். சொந்த ஊருக்குப் போய் பழகிய மனிதர்களின் கையைப் பிடித்துக்கொண்ட இதமான உணர்வு படம் முழுக்க நிறைந்திருக்கிறது. நல்ல கதை அமைந்து விட்டால், இயல்பாகவும் அது இருந்துவிட்டால் பெரிய ஹீரோக்கள், பெரிய பட்ஜெட் இல்லாமலேயே ஜெயித்துவிடலாம் என்பது இப்படத்தின் மூலம் மீண்டும் நிரூபணமாகியிருக்கிறது. ஆக, தரமான இயக்குநர் பட்டியலில் சசிகுமாரும் சேர்கிறார். `சுப்ரமணியபுரம்'- நல்ல சினிமாவுக்கு போடப்பட்ட உரம். kumudam.com |