|
மாணவன் நினைத்தால் - திரை விமர்சனம்
Jul 21,2008 00:00
by
admin
போதை பழக்கத்துக்கு அடிமையாகி சீரழியும் மாணவர்களுக்கு வகுப்பு எடுத்திருக்கும் படம். புதுமுக ஹீரோ ரித்திக், பிளஸ்&2 வில் மாநிலத்திலேயே முதலாவதாக வந்த மாணவன். இட்லி கடை நடத்தும் அம்மாவால் மேற்கொண்டு படிக்க வைக்க முடியாமல் போக, முதலமைச்சரிலிருந்து சாதாரண குடிமகன் வரைக்கும் செய்த உதவியால் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படிக்கிறார். கல்லூரி வாழ்க்கையில் தீய சகவாசத்தால் போதைக்குஅடிமையாகிறார். இதனால் அவனை காதலித்த ஆதிரா விலகுகிறார். கடைசியில் பரீட்சை கூட எழுதமுடியாத நிலை ஏற்பட்டு தற்கொலைக்கு தள்ளப்படுகிறார். இந்த நேரத்தில் வந்து சேரும் பத்திரிகை நிருபர் பாக்யராஜ் மாணவர்களுக்கு வண்டி வண்டியாய் அட்வைஸ் செய்து விட்டு, ‘மாணவர்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம்’ என்ற தத்துவத்தை கூறிச் செல்கிறார். போதை பழக்கத்துக்கு அடிமையாகும் மாணவர்களை திருத்தும் வகையில் ஒரு படம் தர முயற்சித்திருக்கும் இயக்குனர் எஸ்.பி.ஞானமொழிக்கு பாராட்டு. வகுப்பறையில் ஆசிரியரை கிண்டல் செய்யும் மாணவர்கள், குட்டிச்சுவரில் உட்கார்ந்து கொண்டு மாணவிகளை ஈவ் டீசிங் செய்யும் ரோமியோக்கள், மாணவிக்கு உதவி செய்து காதலை பரிசாக பெறும் ஹீரோ என்று அச்சு அசலான சினிமா (தனமான) கல்லூரி. படத்தின் ஒவ்வொரு காட்சியும் ஏற்கெனவே இன்னொரு படத்தில் பார்த்ததை நினைவு படுத்துகிறது. கொட்டாச்சி அடிக்கும் காமெடி கொட்டம் தாங்க முடியவில்லை. ஹீரோயினிக்கு முத்தம் கொடுக்க வேண்டும் என்று ஹீரோவை மாணவர்கள் ராகிங் செய்ய, ஹீரோயினே வந்து முத்தம் கொடுத்து ஹீரோவை காப்பாற்றுவது, தற்கொலை செய்யப்போகும் ஹீரோவை இன்னொருவரை காப்பாற்ற வைத்து உயிரின் மகத்துவத்தை பாக்யராஜ் உணர வைப்பது மாதிரி சில சுவாரஸ்யங்களும் இருப்பது ஆறுதல். பெரிய எதிர்பார்ப்போடு என்ட்ரி கொடுக்கும் பாக்யராஜ், அட்வைஸ் ராஜாவாகி ஏமாற்றுகிறார். வி.தஷியின் இசையில், பாடல்களில் சுகம்.
|