|
லவ் ஸ்டோரி -2050
Jul 02,2008 00:00
by
admin
ஆட்லேப்ஸ் நிறுவனமும் பவேஜா மூவிஸ் நிறுவனமும் இணைந்து பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் "லவ் ஸ்டோரி - 2050' என்ற பிரமாண்டமான ஹிந்தி படத்தைத் தயாரித்துள்ளது. படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான ஹாரி பவேஜா இதில் தன்னுடைய மகன் ஹர்மன் பவேஜாவைக் கதாநாயகனாக அறிமுகப்படுத்துகிறார். பாலிவுட்டின் பிரபல நடிகை ப்ரியங்கா சோப்ரா கதாநாயகியாக நடித்துள்ளார். ஹர்மனும் ப்ரியங்காவும் காதலர்கள். ஹர்மனுடைய மாமா ஒரு விஞ்ஞானி; பல வருட ஆராய்ச்சிக்குப் பிறகு "டைம் மெஷின்' எனப்படும் ஒரு கால இயந்திரத்தைக் கண்டுபிடிக்கிறார். அதன் மூலம் ஒருவர், தாம் நினைக்கும் காலத்துக்குப் பயணிக்க முடியும். அந்த இயந்திரத்தின் மூலம் 2050-ம் ஆண்டுக்குச் செல்ல வேண்டும் என விரும்புகிறார் நாயகி. இதையடுத்து நாயகியின் தம்பி, தங்கை, நாயகன் ஆகிய நால்வரும் கால இயந்திரத்தின் மூலம் 2050-ம் ஆண்டுக்குப் பயணிக்கின்றனர். இப்போது 2050. வானில் பறக்கும் கார்கள், ஆகாய ரெயில்கள், 200 மாடிக் கட்டடங்கள், எங்கு பார்த்தாலும் ரோபோக்களின் ஆதிக்கம் என மும்பை நகரமே மாறியிருப்பதைக் கண்டு பிரமிக்கிறார்கள். நகரைச் சுற்றிப் பார்க்கும் அவர்கள், எதிர்பாராத விதமாக ஒரு பெரிய ஆபத்தில் சிக்குகிறார்கள். இதில் காதலனும் காதலியும் பிரிய நேரிடுகிறது. இந்நிலையில் ஒரு பெண் ரோபோ, கதாநாயகனுக்கு உதவுகிறது. இறுதியில் என்ன நடக்கிறது என்பதை தொழில்நுட்ப உதவியுடன் பிரமாண்டமாகச் சொல்வதுதான் கதை. ரோபோவுடன் ஹர்மன் நடனமாடும் காட்சி, ரசிகர்களை வியக்க வைக்கும். படத்தின் 9 பாடல்களும் ஏற்கெனவே ஹிட் ஆகி படத்துக்குப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படம் ஜூலை 4-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இசை -அனுமாலிக். பாடல்கள் -ஜாவித் அக்தர். ஒளிப்பதிவு -விஜய்குமார் அரோரா.
|