ஆயுதம் செய்வோம் - திரை விமர்சனம்
Jun 27,2008 00:00 by admin

 நடிப்பு:  சுந்தர்.சி., அஞ்சலி, நெப்போலியன், விவேக், நாசர், சுகன்யா.

தயாரிப்பு:  பிரமிட் சாய்மீரா.

டைரக்ஷன்:  உதயன்.

இசை: ஸ்ரீகாந்த்தேவா.

 

 

 நடுரோடில் காரை நிறுத்திவிட்டு தூங்கும் சுந்தர்.சி, அவருக்கு வக்காளத்து வாங்கும் டிராபிக் கான்ஸ்டபிள் விவேக் ஆகியோர் மீது வழக்கு தொடுக்கிறார் வக்கீல் விஜயகுமார். இருவரும் மதுரை காந்தி மியூசியத்தில் தங்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பளிக்கிறார்.

தண்டனை முடிந்து சென்னை வரும் சுந்தர்.சி.க்கு அடியாள் வேலை காத்திருக்கிறது. விஜயகுமாரிடம் உள்ள ரகசிய பைலை பறித்து வரச் சொல்லி ஏவுகிறார் மணிவண்ணன். அப்போது நடக்கும் தள்ளுமுள்ளில் இரும்பு கம்பி குத்தி பலியாகிறார் விஜயகுமார். சாகும் தருவாயிலும் Ôவாழ்க வளமுடன்Õ என்று சுந்தரை வாழ்த்துகிறார்.

அந்த வாழ்த்து அவரை தூங்கவிடாமல் துரத்துகிறது. அதற்கு பரிகாரமாக விஜயகுமாரின் லட்சியத்தை நிறைவேற்ற முயல்கிறார். கலெக்டர் சுகன்யாவை கொல்லும் மணிவண்ணனின் முகத்திரையை கிழிக்கும் ஆதரத்தை தேடுகிறார்.

அதை மணிவண்ணனின் அடியாட்கள் எரிக்கின்றனர். ஆதாரம் அழிந்தாலும் காந்திய வழியில் உண்ணாவிரதமிருந்து மணிவண்ணனை சட்டத்தின் முன் எப்படி நிறுத்துகிறார் என்பது கிளைமாக்ஸ்.

காந்தி மியூசியத்தில் தங்கி சேவை செய்ய வேண்டும் என்று நீதிபதி அனுப்பியதும், ஏதோ டூருக்கு வந்ததுபோல் சுந்தரும், விவேக்கும் அடிக்கும் லூட்டி ஜிகு ஜிகு காமெடி. காந்தியவாதிகளிடம் வம்பு செய்யும் கிச்சா கோஷ்டியை சுந்தர் வெளுத்ததும் மறுநாள் மியூசியத்துக்கு வந்து கட்டுகட்டாக சத்தியசோதனை புத்தகத்தை வாங்கி செல்வதும் லக லக.

மியூசியத்தை சுற்றிப்பார்த்தால் மாளவிகாவுடன் கைகுலுக்கலாம், சத்தியசோதனை புத்தகத்தில் கேட்கப்படும் கேள்விக்கு பதில் சொன்னால் அவருடன் சாப்பிடலாம் என்று சுந்தரும், விவேக்கும் போட்டி நடத்துவது மகா ரவுசு.

சொன்னபடி மாளவிகாவை அழைத்து வந்து Ôவாள மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம்Õ பாட்டு பாடி ரகளை செய்ததும், இப்படிக்கூடவா காந்தி கொள்கை பரப்புவார்கள் என்ற கேள்வி எழாமல் இல்லை. மாளவிகாவின் ரசிகர் ஒருவர் ‘சத்தியசோதனை’ படித்து திருந்திவிட்டார் என்று நாசரிடம் முந்தைய காட்சிக்கு விளக்கம் கொடுக்கிறார் சுந்தர்.சி.

வழக்கம்போல் ரவுடியாகவே கடைசிவரை காலத்தை தள்ளிவிடுவாரோ என்று எண்ண வைக்கும் சுந்தர், திடீரென்று காந்திய வழியில் உண்ணாவிரதம் தொடங்குவது புதுச் சிந்தனை. போலீசாரும், ரவுடிகளும் மிரட்டியும், Ôஉண்ணாவிரதத்தை கைவிடமாட்டேன், கலெக்டர் சுகன்யாவை எரித்துக்கொன்ற மணிவண்ணன் மீது நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும்Õ என்று  போராட்டம் தீவிரமாவது கதைக்கு அசைக்க முடியாத அடித்தளமாகிறது.

தனி மனிதனாக சுந்தர்.சி தொடங்கும் போராட்டத்துக்கு ஆதரவாக 80 வயது தியாகி உண்ணாவிரதம் அமர்வதும், அவரைப்பார்த்து அப்பகுதியில் உள்ள கடைக்காரர்கள் கடைகளை அடைத்துவிட்டு ஒட்டுமொத்தமாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டதும் மனதுக்குள் பூக்கிறது தன்னம்பிக்கை. ரவுடிக் கூட்டத்துடன் தன்னை தாக்கவரும் பொன்னம்பலத்திடம் 15 நிமிடம் Ôநான் சைதை சத்யாவாக மாறுகிறேன்Õ என்று சொல்லிவிட்டு சுந்தர்.சி. பின்னி பெடலெடுப்பது சினிமாத்தனம்.

Ôஅண்ணனை கொலை செய்தவனை அழிப்பேன்Õ என்று சபதம் செய்யும் ஐ.பி.எஸ். நெப்போலியன் நச். சுந்தர்.சி.தான் கொலையாளி என்று தெரிந்ததும் அவரை தாக்குவதும், அவர் சொல்லும் காரணத்தை கேட்டதும், மன்னிப்பு கேட்பதும் என்று வித்தியாசமான போலீஸாக பச்சக் ஆகிறார் நெப்ஸ். விவேக்கின் காமெடி வெடி தாறுமாறாக வெடிக்கிறது.

பாடலுக்கும், காதலுக்கும் பயன்பட்டிருக்கிறார் அஞ்சலி. தியாகி நாசர், கலெக்டர் சுகன்யா, அண்ணாச்சி ஜி.எம்.குமார், சமூக சேவகர் விஜயகுமார், வில்லன் மணிவண்ணன் எல்லோருமே நிறைவு. காந்திய கொள்கைக்கு கஷ்டம் வந்துவிடாமல் கமர்ஷியல் மசாலா கலந்திருக்கும் இயக்குனர் உதயனின் டெக்னிக்கை பாராட்டலாம்.

ஸ்ரீகாந்த் தேவா இசை பரவாயில்லை ரகம். செல்வராஜின் ஒளிப்பதிவு படத்துக்கு பலம்.