|
அறை எண் 305ல் 'கடவுள்' - திரை விமர்சனம்
Apr 22,2008 00:00
by
admin
நடிப்பு: பிரகாஷ்ராஜ், சந்தானம், கஞ்சா கருப்பு, மதுமிதா, ஜோதிர்மயி, எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, பெரியார்தாசன். தயாரிப்பு: ஷங்கர் இயக்கம்: சிம்புதேவன் இசை: வித்யாசாகர் திருவல்லிக்கேணி கருப்பையா மேன்ஷனில் 2 மாத வாடகை பாக்கியுடன் தங்கி இருக்கும் சந்தானம், கஞ்சா கருப்பு வேலை இல்லாமல் அலைகின்றனர். மனம் வெறுத்த இருவரும் கடவுளை திட்டுகின்றனர். திடீரென்று அவர்கள் முன் தோன்றும் பிரகாஷ்ராஜ், 'நான் தான் கடவுள்' என்கிறார். 'பண உதவி செய்ய மாட்டேன், நான் தான் கடவுள் என்று யாரிடமும் சொல்லக்கூடாது' என்று 2 கண்டிஷன்போட்டு அவர்களுடன் தங்குகிறார். 'கேலக்ஸி' என்ற சக்திவாய்ந்த கருவியை காட்டி, 'உலகத்தை இதைக் கொண்டுதான் கட்டுப்படுத்துகிறேன்' என்ற ரகசியத்தையும் கூறுகிறார். அக்கருவியை சந்தானம், கருப்பு திருடிச் செல்கின்றனர். கருவியை பறிகொடுத்ததால் சாதாரண மனிதராகிறார் பிரகாஷ்ராஜ். 'கேலக்ஸி'யுடன் தப்பிய இருவரும் டகால்டி வேலை செய்கின்றனர். திருட்டு கொடுத்த 'கேலக்ஸி' பிரகாஷ்ராஜுக்கு கிடைத்ததா? சந்தானம், கருப்புவின் வாழ்க்கை என்னவாகிறது என்பதை சுவாரஸ்யமாக சொல்கிறார்கள். 'கண்முன் வந்தால் கடவுளுக்கும் அல்வாதான்' என்ற விஷயத்தை சுகமான ரகளையாக்கியிருக்கிறார் இயக்குனர் சிம்புதேவன். கருப்பையா மேன்ஷன், ராசு (சந்தானம்), மொக்கை (கஞ்சா கருப்பு), குட்டி மாடசாமி (எம்.எஸ்.பாஸ்கர்), வெல்லஸ்லிபிரபு (இளவரசு), கிரி சேட்டன் (வி.எம்.சி.ஹனீபா), ருத்ரன் (ராஜேஷ்), மூன்றாவது மாடி பெரிசு (வி.எஸ்.ராகவன்) என மேன்ஷன் பார்ட்டிகள் செய்யும் அலும்புகள் தினம் தினம் திருவல்லிக்கேணியில் நடக்கும் யதார்த்தம். '2 மாத வாடகை பாக்கியை கொடுக்கலேன்னா ரூமை காலி பண்ணிட்டு போங்கடா' என்று சந்தானம், கருப்பை விரட்டும் எம்.எஸ்.பாஸ்கர்தான் கதையின் பவர் என்ஜினை ஸ்டார்ட் செய்துவிடுகிறார். காபி ஷாப்பில் சர்வராக சேரும் சந்தானம், 'கஸ்டர் கொடுங்க' என்று ஆர்டர் தருபவரிடம் 'ஸ்ட்ராங்கா? லைட்டா?’ என்று கேட்டு குழப்புவதும், அப்போது காதலி மதுமிதா ஷாப்பிற்குள் வருவதை பார்த்ததும் மின்னல் வேகத்தில் சர்வர் யூனிபார்மை கழற்றிவிட்டு டி-ஷர்ட், பேண்ட்டுன் வந்து கொஞ்சும்போது குபுக்கென கொட்டுகிறது சிரிப்பருவி. பூக்காரியிடம் 2 ரூபாய்க்கு ரோஜாவை வாடகைக்கு எடுத்து மதுமிதாவை பின்தொடரும் சந்தானம், 'ஐ லவ் யூ' சொல்லிவிட்டு மீண்டும் திரும்பி வந்து ரோஜாவை திருப்பி தந்து ஒரு ரூபாயை எடுத்துக்கொண்டு நகர்வது அசத்தல். கடவுள் பிரகாஷ§டன் இரவில் தங்கும்போது, ‘அப்புறம் சாமி; நம்ம லட்சுமி, சரஸ்வதி, பார்வதிலாம் சவுக்கியமா இருக்காவுளா?’ என்று கஞ்சா கருப்பு போதையில் கேட்கும்போது குபுக்கென கொட்டுகிறது கெக்கெ பிக்கே! சந்தானம், கஞ்சா கருப்பை, யாரெல்லாம் விரட்டுகிறார்களோ அவர்களிடம் பேசி இருவரையும் பிரகாஷ் மீட்பது நெகிழ்ச்சி. கடவுளின் கேலக்ஸியுடன் எஸ்கேப்பாகும் சந்தானமும், கஞ்சா கருப்பும் நிலவில் ஹாயாக உட்கார்ந்துகொண்டு காற்று வாங்குவதும், நந்தவனத்தை உருவாக்கி டிஸ்கோத்தே ஆடுவதுமாக ரகளை ராஜ்யம் நடத்துகின்றனர். பூமியிலிருந்து பார்க்கும் போது நிலவு குலுங்குவது, காட் இஸ் நோ வேர் என்பதை, காட் இஸ் நவ் ஹியர் என ஆக்குவது, ஜாதி கலவரத்தின் வலியை மேன்சன் ரிசப்சனிலேயே காட்டுவது, குறையன்றுமில்லை பாடலை சரியான இடத்தில் பயன்படுத்தியிருப்பது என ஆங்காங்கே சிம்புதேவன் டச்! கேலக்ஸியை பறிகொடுத்துவிட்டு சாதாரண மனிதனாக பிரகாஷ்ராஜ் உழைக்கத் தொடங்குவது அனுபவ பாடம். கடவுள் உண்டா இல்லையா? என்பதற்கான பிரகாஷ்ராஜ் - ராஜேஷ் வாதங்கள் சிந்திக்க வைக்கிறது. மெஸ் நடத்தும் ஜோதிர்மயி, ரவுடி சம்பத், கவர்மென்ட் வேலைக்கு கொடிபிடிக்கும் டெல்லி கணேஷ், ‘ஏய் கேனப்பய மவனே’ என்று கஞ்சாவை அழைக்கும் கிராமத்து அப்பா பெரியார்தாசன், ‘கேரளா ஜுவல்லர்ஸ் கடை நம்மளுதுதான்’ என்று புருடா விடும் இளவரசு என அனைத்து கேரக்டர்களும் மனதில் நிற்கிறார்கள். முதல் காட்சியில் போடும் 2 கண்டிஷன்களை அடுத்தடுத்த சீன்களிலேயே பிரகாஷ்ராஜ் மீறுவதும் லாஜிக் மிஸ். சௌந்தராஜனின் ஒளிப்பதிவும் வித்யாசாகரின் இசையும் படத்துக்கு பலம்.
|