நடிகை புளோராவுக்கு நிபந்தனை ஜாமீன்
Mar 18,2008 00:00 by admin

 

போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து அமெரிக்க விசா வாங்க முயன்ற
வழக்கில் தெலுங்கு துணை நடிகை புளோராவுக்கு உயர் நீதிமன்றம்
நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

மும்பையைச் சேர்ந்தவர் புளோரா சைனி (29). இவர் தெலுங்கு படங்களில்
துணை நடிகையாக நடித்துள்ளார். தமிழில் "கஜேந்திரா' என்ற படத்தில்
நடித்துள்ளார்.

இவர் ஆந்திரத்தைச் சேர்ந்த வெங்கட்ரெட்டி (32), ஸ்ரீ லதா (31) ஆகியோருடன்
அமெரிக்கா செல்வதற்கு விசா கோரி விண்ணப்பித்திருந்தார்.

விசாவுக்காக அவர்கள் சமர்ப்பித்த ஆவணங்கள் போலியானது என்று
தெரியவந்தது. இவர்கள் மூன்று பேர் மீதும் ராயப்பேட்டை காவல் நிலையத்தில்
தூதரக அதிகாரிகள் புகார் செய்தனர். இதையடுத்து அவர்கள் கைது
செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு புளோரா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்
தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.என். பாஷா, "ரூ. 50
ஆயிரத்துக்கு இருநபர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். தாய்
அல்லது தந்தை, யாராவது ஒருவர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்.

ஜாமீனில் விடுவிக்கப்பட்ட பிறகு, அடுத்த 7 நாள்களுக்கு ராயப்பேட்டை காவல்
நிலையத்தில் காலை 10.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை விசாரணைக்கு
ஆஜராக வேண்டும்' என்று உத்தரவிட்டார்.