|
'நெஞ்சத்தை கிள்ளாதே' - திரை விமர்சனம்
Feb 21,2008 00:00
by
admin
நடிப்பு : விக்ராந்த், பாரதி, விக்ரமாதித்யா, யுகேந்திரன்,மணிவண்ணன், சரண்யா. தயாரிப்பு : ப்ளு வாட்டர்ஸ் மூவி மேக்கர்ஸ். இயக்கம் : அகத்தியன். இசை : பிரேம் ஜி. அமரன். விமர்சனம் தவிதமான அனுபவங்களை தேடிச் செல்லும் பணக்கார பிள்ளை, ஹீரோ விக்ராந்த். இவரது செயலை கண்டு வெறுப்படையும் நிருபர் பாரதிக்கு அவர் மீது காதல். ஏற்க மறுக்கிறார் விக்ராந்த். போலீஸ் நண்பர் தரும் அறிவுரையை ஏற்று, பாரதியிடம் காதலைச் சொல்கிறார் விக்ராந்த். அதை பாரதி ஏற்க மறுத்து வேறு ஒருவரை காதலிப்பதாகக் கூறுகிறார். இந்த திருமணத்தை தானே நடத்தி வைப்பதாக கூறும் விக்ராந்த், தனது காதலில் வெற்றி பெறுகிறாரா என்பது கிளைமாக்ஸ். வழக்கமான காதலைச் சொல்வது தனது வேலை இல்லை என்று மீண்டுமொருமுறை நிரூபித்திருக்கிறார் அகத்தியன். விக்ராந்த், பைவ் ஸ்டார் ஓட்டலில் செம வெட்டு வெட்டியபிறகு தன்னிடம் காசில்லை என்று போலீசுடன் செல்வதுவரை இவர் என்ன கேரக்டர் என்று புரிந்துகொள்ள முடியவில்லை. வாழ்வில் ஒரு நாள் என்ற அனுபவ புத்தகம் எழுதுவதற்காக ஒவ்வொரு செயலிலும் ஈடுபடுவதாக அவரே கூறியபிறகுதான் விக்ராந்த் கேரக்டர் பற்றி ஒரு முடிவுக்கு வர முடிகிறது. தனது தங்கைக்கு உடை வாங்க சென்று, அங்கு தேர்வு செய்த சுரிதாரை ட்ரையல் அறையில் போட்டுப்பார்ப்பது, 15 ஆயிரம் ரூபாய் கொடுத்து கூட்டி வந்த பாலியல் தொழிலாளிக்கு சாப்பாடு கொடுத்து தூங்க வைப்பது, பாரதியிடம் சவால் விட்டு படகு வீட்டில் ஒரே கட்டிலில் அவருடன் படுத்திருப்பது என கேரக்டரோடு ஒன்றியிருக்கிறார் விக்ராந்த். திடீரென்று நடுரோட்டில் நடனம் ஆடி அதில் கிடைக்கும் பணத்தை கொண்டு பாரதிக்கு நினைவுபரிசு கொடுக்கும் விக்ராந்த், 'எனது காதலிக்கு என் சம்பாத்தியத்தில் வாங்கிக் கொடுக்கும் பரிசு' என்று கூறுவதும், பின்னர் பாரதி தன் காதலை வெளிப்படுத்தும்போது அதை ஏற்காமல் உதாசினப்படுத்திவிட்டு செல்வதும் முரண்பாட்டின் மொத்த உருவம். திடீரென்று விக்ரமாதித்யாவை காதலிப்பதாக பாரதி கூறுவது திருப்பம். மணமேடையில் தாலி கட்டப்போகும் கடைசி நேரத்திலும் தன் காதல் ஜெயிக்கும் என்று விக்ராந்த் கூறுவதும், அதையும் மீறி பாரதி கழுத்தில் விக்ரமாதித்யா தாலி கட்டுவதும் பர பர. 'நீ அவனுக்கு மனைவி என்றாலும் நீ விடும் இந்த கண்ணீர்தான் எனக்கு கிடைத்த காதல் வெற்றி' என்று விக்ராந்த் சொல்லும்போது கத்தியின்றி ரத்தமின்றி காதல் ஜெயிக்கிறது. பிரேம் ஜி.அமரனின் இசையில் பாடல்கள் இதம். 'நெஞ்சத்தை கிள்ளாதே' பாடல் இனிமை. நாடகதன்மையான காட்சிகள் படத்துக்கு பெரிய மைனஸ். காமெடிக்கு பஞ்சம் என்பதால் பல இடங்களில் கொட்டாவி வருவதை தவிர்க்க முடியவில்லை.
|