|
'அஞ்சாதே' - திரை விமர்சனம்
Feb 18,2008 00:00
by
admin
சப்இன்ஸ்பெக்டராகும் ஆசையில் இருக்கிறார் அஜ்மல். எந்த லட்சியமும் இல்லாமல் திரிகிறார் நரேன். அவரை தந்தை எம்.எஸ்.பாஸ்கர் கண்டிக்க, ரோஷம் அடையும் நரேன், ரெகமண்டேஷனில் சப்&இன்ஸ்பெக்டர் தேர்வில் பாஸாகிறார். முறைப்படி தேர்வு எழுதிய அஜ்மல் தோல்வியை தழுவ, இந்த சம்பவம் அஜ்மல் மனதை பாதிக்கிறது. நரேனை எதிரியாக பார்க்கத் தொடங்குகிறார். இந்நிலையில் பாண்டியராஜன், பிரசன்னா தலைமையிலான ரவுடிக் கூட்டம் பணக்கார வீட்டுப் பெண்களை கடத்தி பணம் பறிக்கிறது. அக் கூட்டத்தில் சிக்குகிறார் அஜ்மல். போலீசின் பிடி இறுகியதும் ஊரைவிட்டு தப்பிச் செல்ல, பிரசன்னா கூட்டம் முடிவு செய்கிறது. அதற்கு அஜ்மலும் உதவுகிறார். உயர் போலீஸ் அதிகாரியின் மகள்களை பிணயக் கைதிகளாக பிடித்து வைத்துக்கொண்டு தப்பிச் செல்கின்றனர். அவர்களை நரேன் எப்படி தடுக்கிறார் என்பதை பரபரப்புடன் சொல்கிறது கிளைமாக்ஸ். 'சித்திரம் பேசுதடி'யில் ரவுடியின் காதலைச் சொன்ன இயக்குனர் மிஷ்கின், அதிலிருந்து மாறுபட்டு ஹாலிவுட் தரத்துடன் தந்திருக்கிறார் இதை. ரவுடியாகவே காலத்தை தள்ளப்போகிறார் நரேன் என்பதுபோல் தொடக்க காட்சிகளில் பில்டப் செய்யப்படும்போது, பின்னர் வரப்போகும் திருப்பங்களை யூகிக்க முடியவில்லை. சப்இன்ஸ்பெக்டர் தேர்வில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் வரும் நரேன், தனது உயிர் நண்பர் அஜ்மலிடம் தன் பெருமையை தம்பட்டம் அடித்துக் கொள்வதற்காக அவர் வீட்டின் முன் நின்று சத்தம்போட்டு அழைப்பதும், அடுத்த நொடியில் அஜ்மல் பாஸ் ஆகவில்லை என்ற தகவல் தெரிந்ததும் தவித்துப்போவதும் வித்தியாசம். 'கடத்தப்பட்ட பெண்களை இன்னும் ஏன் கண்டுபிடிக்கலை' என்று பொன்வண்ணனிடம் உயர் அதிகாரி கேள்விமேல் கேள்வி கேட்கும்போது குறுக்கிடும் நரேன், 'அந்த குழந்தைகளை காப்பாத்தணும்' என்று திரும்பத் திரும்ப சொல்வதைக் கேட்டு எரிச்சலடையும் உயரதிகாரி, 'உன்னை சஸ்பென்ட் பண்றேன்’ என்று கடுப்படிக்க, 'நீங்க அவங்களை கண்டுபிடிச்சுட்டு வந்து சஸ்பெண்ட் பண்ணுங்க’ என்று நரேன் பதில் சொல்லும்போது அதிர்கிறது தியேட்டர். நடுத்தரக் குடும்பத்துக்காரராக கலங்க வைக்கிறார் எம்.எஸ்.பாஸ்கர். நண்பர்களுடன் சுற்றித் திரியும் மகன் நரேனை கண்டிக்கும் காட்சிகளிலும் திருவிழா நேரத்தில் பெண்ணை கிண்டல் செய்துவிட்டதாக யாரோ கூறியதும், நரேனை செருப்பால் அடித்தபடி குமுறும்போதும் சராசரி அப்பாவாகிறார். அப்பாவியாக நடித்து வந்த பாண்டியராஜன் இதில் பயம் கலந்த வில்லனாக அதிர்ச்சியளிக்கிறார். பெண்களை கடத்தி வந்தவனிடம் பேரம் பேசிக்கொண்டே, அவன் தலையில் பாட்டிலால் அடித்து வீழ்த்தும்போது திடுக். 'சாக்லெட்' ஹீரோ பிரசன்னாவா இது? ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. அதிகம் பேசாமல் கண்களின் அசைவிலேயே வில்லத்தனத்தை வித்தியாசமாக வெளிப்படுத்துகிறார். புதுமுகம் அஜ்மல் தமிழுக்கு கிடைத்திருக்கும் மற்றொரு அழகிய வில்லன். விஜயலட்சுமியின் தங்கச்சி சென்டிமென்ட் படத்துக்கு வலு. கையிழந்தவர், கால் ஊனமானவர் என வாழ்க்கையில் பார்க்கும் யதார்த்தத்தை படத்தில் கொண்டு வந்திருக்கிறார் மிஷ்கின். ரோட்டில் வெட்டுப்பட்டு கிடந்த ஒருவனின் ரத்தக்கறைபடிந்த இடத்தில் பூவிற்கும் பாட்டி, பூ தூவுவது, என ஏகப்பட்ட கவிதை காட்சிகள். 'கத்தாழ கண்ணாலே குத்தாதே' பாடல் இன்னொரு 'வாள மீனு..'. சுந்தர்.சி.பாபுவின் பின்னணி இசை பரபர. அடுத்து என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்புடன் இயக்கி இருக்கும் மிஷ்கின், சில காட்சிகளில் (அஞ்சாமல்) கத்தரி வைத்தால் படத்தின் வேகம் பல மடங்கு எகிறும். மகேஷ் முத்துசாமியின் காமிரா கதையை மிஞ்சாமல் சுழன்றிருப்பது இன்னொரு பலம்.
|