நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் 2008-ல் வெளியானாலும், வசூல் ரீதியாக எதிர்பார்க்கப்பட்ட பல படங்களும் ஏமாற்றத்தை அளித்தன. இதில் விஜய், அஜீத் கூட தப்பவில்லை.
விக்ரம் - லிங்குசாமி கூட்டணியில் உருவான 'பீமா' மீதான எதிர்பார்ப்பு மிகுதியாக இருந்த சுழலில், ஆண்டின் துவக்கத்தில் வெளியானது. ஆனால், ரசிகர்களின் எதிர்பாப்பு மட்டுமின்றி, வசூல் ரீதியாகவும் எதிர்பார்க்கப்பட்ட லாபம் கிட்டவில்லை.
'இம்சை அரசன் 23-ம் புலிகேசி' வெற்றிக்களிப்பில் மிக பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட வடிவெலு படம் 'இந்திர லோகத்தில் அழகப்பனுக்கு' ஸ்ரேயாவின் ஒற்றைப் பாடல் கூட உதவவில்லை. மீண்டும் அடி வாங்கும் பாணியைத் தொடர்ந்தார் கைப்புள்ள!
மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான 'உதயனானு தாரன்' படத்தின் ரீமேக்கான, ப்ரித்விராஜ் - பிரகாஷ் ராஜ் படமான 'வெள்ளித்திரை'யும் ஜொலிக்காமல் போனது.
வடிவேலுவுக்கு 'இந்திரலோகத்தில் அழகப்பன்' எப்படியோ... இயக்குனர் சிம்புதேவனுக்கு 'அறை என் 305-ல் கடவுள்' அமைந்தது. ஓவர் டோஸ் அட்வைஸ் எடுபடாமல் போய்விட்டது.
விஜய் - தரணி கூட்டணி மீண்டும் கில்லி ஆடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்த வேகத்தில் 'குருவி' பறக்காமல் போய்விட்டது. எனினும் வசூல் ரீதியில் பாதிப்படையவில்லை.
2008-ல் நூறு சதவிகித ஏமாற்றம் என்றால் அது, ரஜினியின் 'குசேலன்' தான்! மலையாளத்தில் ஸ்ரீனிவாசன் நடித்து மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற 'கதபறயும் போள்' படத்தின் ரீமேக்தான், ஆனால் ரஜினி இருக்கிறார் என்பதால் கதையின் நாயகன் பசுபதியைக் காட்டிலும் அதிக முக்கியத்துவமும், பில்டப்புகளும் கொடுக்கப்பட்டது. இதனால், கதை சிதைக்கப்பட்டது. ரஜினியின் கதாப்பாத்திரமும் முழுமையாக செம்மைப்படுத்தப்படவில்லை! வசூலில் மிகப் பெரிய அடி வாங்கிய தென்னிந்திய திரைப்படம், 'குசேலன்'தான்.
அடுத்ததாக, மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது, விஷால் - நயன்தாரா கூட்டு சேர்ந்த 'சத்யம்'. ரசிகர்களையும் திருப்தி செய்யவில்லை. வசூலிலும் ஏமாற்றமே!
நீண்ட ஏமாற்றம் பட்டியலில் திபாவளிக்கு வெளியான அஜீத்தின் 'ஏகன், பரத்தின் 'சேவல்' போன்ற படங்களுக்கும் 2008-ல் முக்கியப் பங்கு உண்டு!
2008 - அசத்திய படங்கள்!
உலக பொருளாதார நெருக்கடியால் தமிழ் சினிமா குறிப்பிடத்தக்க வகையில் பாதிக்காமல் போனதற்கு, மிக பிரமாண்டமான பொருட்செலவு இல்லாமல், குறைந்த செலவில் நிறைவான படங்கள் சில வெளியானதும் ஒரு காரணம்.
இப்படி வெளியான படங்கள் வசூலில் லாபத்தை ஈட்டியதோடு, தரமான படங்கள் என்ற நிலையில், தமிழ் சினிமாவை அடுத்தக் கட்டத்தில் நகர்த்த துணை புரிந்தன.
அஞ்சாதே, சுப்ரமணியபுரம், காதலில் விழுந்தேன், தெனாவட்டு, பொய் சொல்லப் போறோம், சரோஜா, ராமன் தேடிய சீதை, தாம் தூம், ஜெயம் கொண்டான், பூ, அபியும் நானும் போன்ற படங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தவை.
இவற்றில், மிஷ்கினின் அஞ்சாதே, சிவக்குமாரின் சுப்ரமணிய புரம், சசியின் பூ ஆகிய படங்கள் தமிழ் சினிமாவின் வல்லமையை உலகுக்கு உணர்த்தும் முயற்சிகளில்... 2008-ல் முன்னிலை வகிப்பவை!
படம் வெளியாக நீண்ட நாட்கள் எடுத்துக் கொண்டாலும், பட்ஜெட் கொஞ்சம் கூடுதல் என்றாலும், இயக்குனர் பாரதிராஜாவின் 'பொம்மலாட்டம்', 2008-ன் கவனத்துக்குரிய படைப்பே.

இயக்குனர் ஜி.மாரிமுத்துவின் 'கண்ணும் கண்ணும்' முயற்சியும் வரவேற்கத்தக்கது!
வழக்கம்போல், பட்ஜெட் கொஞ்சம் கூடுதல் என்றாலும் தனுஷின் 'யாரடி நீ மோகினி', ஜெயம் ரவியின் 'சந்தோஷ் சுப்ரமணியம்', சிம்புவின் 'சிலம்பாட்டம்' போன்ற படங்கள் வசூலில் கையைச் சுட்டுக் கொள்ளவில்லை!
2008-ல் டாக் ஆஃப் தி கோலிவுட்டான ஜே.கே.ரித்தீஷின் 'நாயகன்' படத்தின் வெற்றியை (!!!) இங்கே பதிவு செய்யாவிட்டால், தமிழ் சினிமா உலகம் நம்மை மன்னிக்காது!
2008... இருவர்!
கோலிவுட்டில் சூப்பர் ஹிட் கொடுத்தது மட்டுமின்றி, படம் சிறப்பாக வர வேண்டும் என்பதற்காக மிகச் சிரத்தையுடனும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றிய கமல்ஹாசனும் சூர்யாவுமே 2008 தமிழ் சினிமா நடிகர்களில் நிகரற்ற 'இருவர்'!
அவதார நாயகன்!
தமிழ் சினிமா உலகில் மட்டுமின்றி, இந்திய அளவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம்தான், கமல்ஹாசனின் 'தசாவதாரம்'!

பாட்டி முதல் புஷ் வரை 10 வெவ்வேறு கதாப்பாத்திரங்களில் நடித்த கமல்ஹாசான், தான் ஓர் உலக நாயகன் என்பதை நிரூபித்தார். அவரது நடிப்புக்கு மைல்கல்லாக திகழ்ந்த தசாவதாரம், வசூல் ரீதியாகவும் மகத்தான வெற்றிப் பெற்றது சிறப்புக்குரியது.
இந்த அசாத்திய முயற்சி, இந்திய முன்னணி நடிகர்களுள் தவிர்க்க முடியாத ஒருவர் என்று கமல்ஹாசனுக்கு புகழை விரிவாக்கியது என்றால், அது மிகையாகாது!
'சிக்ஸ் பேக்ஸ்' சூர்யா!
கமலஹாசனுக்குப் பிறகு சோதனை முயற்சிகளில் ஈடுபடும் நடிகர்களில் முன்னிலை வகிப்பர், நடிகர் சூர்யா.

18 வயது துள்ளல் இளைஞன், சிக்ஸ் பேக்ஸ் யூத், அன்பான அப்பா என பல்வேறு நிலைகளிலும் 'வாரணம் ஆயிரம்' படத்தில் தனது முத்திரையைப் பதிந்தார், சூர்யா.
நடிப்பில் உச்சத்தைத் தொடுவதோடு, கதாப்பாத்திரத்துக்கு ஏற்றாற் போல் உடலமைப்புகளை மாற்றிக் கொண்டு சிரத்தையுடன் செயல்பட்டது, சூர்யாவை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் சென்றுள்ளது. 'வாரணம் ஆயிரம்' வசூலிலும் எதிர்பார்த்த வெற்றியைக் குவித்தது!
நன்றி: விகடன்