பங்குச் சந்தை தொடர் வீழ்ச்சி காரணமாக சினிமா துறையில் நுழைந்துள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள் கலக்கம் அடைந்துள்ளன.
அதிக பட்ஜெட்டில் படம், நடிகர்களுக்கு பல கோடி சம்பளம் என்ற யுக்தியை கைவிட அந்நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதன் முதல்கட்டமாக இந்தி சினிமா நடிகர்கள், தங்களது சம்பளத்தை குறைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளனர்.
இந்தி சினிமாவில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆட்லாப்ஸ், யூ டிவி, பெர்சப்ட் பிக்சர்ஸ், பி.வி.ஆர்., எரஸ் இன்டர்நேஷனல் உட்பட பல கார்ப்பரேட் நிறுவனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. பங்கு சந்தை தற்போது தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. இதனால் இந்நிறுவனங்கள் பெரிய அளவில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ள சினிமா துறைக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஒரு படத்துக்கு ரூ. 30 கோடி முதல் ரூ. 40 கோடி வரை முன்னணி இந்தி நடிகர்களுக்கு சம்பளம் கொடுக்க இந்நிறுவனங்கள் ஒப்பந்தம் போட்டிருந்தன. இப்போது அதை தளர்த்த முடிவு செய்துள்ளன.
இது தொடர்பாக இந்நிறுவனங்கள் சமீபத்தில் நடிகர்களுடன் பேச்சு நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து படத்தின் வியாபாரத்தை பொறுத்து சம்பளம் பெறுவதாக இந்தி நடிகர்கள் ஆமிர் கான், சல்மான் கான், அக்ஷய் குமார், நடிகைகள் கேத்ரினா கைப், பிரியங்கா சோப்ரா ஆகியோர் ஒப்புதல் அளித்துள்ளனர். ஒரு படத்துக்காக அஜய் தேவ்கனுக்கு ரூ. 40 கோடி சம்பளம் பேசப்பட்டது. இதில் ரூ. 30 கோடியை குறைத்துக் கொள்ள அவர் சம்மதித்து இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
இந்தியை அடுத்து கார்ப்பரேட் நிறுவனங்கள் தமிழ் சினிமாவில்தான் அதிகளவில் முதலீடு செய்து வருகின்றன. அஜீத் நடித்த 'கிரீடம்' படத்தை ஆட்லாப்ஸ் தயாரித்தது. இதில் நடிக்க ரூ. 6 கோடி அஜீத்துக்கு சம்பளமாக தரப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அஜீத் தனது சம்பளத்தை உயர்த்தி விட்டார். வார்னர் பிரதர்ஸ் தயாரிக்கும் படத்துக்கு ரூ. 10 கோடி சம்பளம் பெற உள்ளார் அஜீத். இதனால் சிவாஜி புரொடக்ஷனில் அவர் நடிக்கும் படத்துக்கும் அதிக சம்பளம் கேட்டிருக்கிறார்.
இதே போல விஜய், சூர்யா, மாதவன் ஆகியோரும் கார்ப்பரேட் நிறுவன படங்களில் நடிக்க அதிக சம்பளம் பெற உள்ளனர். இந்தியை தொடர்ந்து தமிழ் நடிகர்களின் சம்பளத்தையும் குறைக்க கார்ப்பரேட் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
இதுகுறித்து யூ டிவி நிறுவனத்தின் சுனில் வாத்வா கூறுகையில், 'சம்பளம் தொடர்பாக நடிகர்களுக்கு கட்டுப்பாடு கொண்டு வந்தது உண்மைதான். தமிழ் சினிமா நடிகர்களுடனும் இது குறித்து பேச்சு நடத்தப்படும்' என்றார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் ராம நாராயணன் கூறும்போது, 'தமிழ் நடிகர்களுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் நிர்ணயித்துள்ள சம்பளம் பற்றி எங்களுக்கு தெரியாது. அந்த சம்பளத்தை மற்ற தயாரிப்பாளர்களால் தர முடியாது. கார்ப்பரேட் நிறுவனங்களின் நடவடிக்கைகள் தொடர்பாக அடுத்த மாதம் நடக்கும் சங்க பொதுக்குழு கூட்டத்தில் பேசுவோம்' என்றார்.