நடிப்பு : பிரெண்டன் பிராசர், மரியா மெல்லோ, ஜெட்லி.
தயாரிப்பு : யுனிவர்செல் பிக்சர்ஸ்
இயக்கம் : ரோப் ஜான்
இரண்டாயிரம் வருடத்துக்கு முன்னால் அபூர்வ மந்திர சக்தியால் சாகாவரம் பெற்றவர்கள் இருந்தார்கள். அவர்களை போல சாகாவரம் பெற்று இந்த உலகத்தையே அடிமையாக்குவதற்காக, அந்த மந்திரங்களை தேடி கண்டுபிடிக்கும் பொறுப்பை ஒரு பெண்ணிடம் கொடுக்கிறார் சீன சக்ரவர்த்தி ஜெட்லி.
அமரத்துவம் பெற்ற பிறகு அந்த பெண்ணை அடைய திட்டமிடுகிறார். ஆனால் அந்த பெண்ணோ தளபதியை காதலிக்கிறார். இதை அறிந்த மன்னன், தளபதியை கொன்று விட்டு அவளையும் கொலை செய்ய முயற்சிக்கிறார்.
தான் கற்ற மந்திர சக்தியால் மன்னனுக்கு சாபம் கொடுத்து விட்டு அவள் அமரத்துவம் அடைகிறாள். மன்னனும் அவனது படை வீரர்களும் மம்மிகளாகி விடுகிறார்கள்.
2000 வருடத்துக்கு பிறகு, ஆராய்ச்சியாளர்களான பிரெண்டன் பிராசர்&மரியா மெல்லோவின் மகன் லூக் போர்ட், சீனாவில் ஆராய்ச்சி செய்யும்போது ஜெட்லியின் மம்மி கிடைக்கிறது.
அதற்கு உயிர் கொடுக்கும் மந்திர கண் இவர்களிடம் இருக்கிறது. அதை சீன தேசத்திடம் ஒப்படைக்க செல்கிறார்கள். இதற்கிடையில் ஒரு படை தளபதி அந்த கண்ணை கொண்டு மன்னனை உயிர்பித்து அவனை கொண்டு உலகையே ஆள திட்டமிடுகிறான். இந்த இரு அணிகளுக்குமிடையிலான போராட்டத்தில் மன்னனும், அவனது படைகளும் உயிர் பெறுகிறது. இறுதி வெற்றி யாருக்கு என்பது கிளைமாக்ஸ்.
முதல் இரண்டு பாகத்தை விட இதில் விறுவிறுப்பும், கிராபிக்சும் அதிகம். பாலை வனத்தில் போர்களம், பூமிக்கு அடியில் அரண்மனை, இமயமலை உச்சியில் தங்க கோவில், பாறை குகைக்குள் புத்தர் கோயில், ராட்சத பனி கரடிகள், மூன்று தலை டிராகன் என்று படம் முழுக்க மிரட்டல்.
எது கிராபிக்ஸ், எது நிஜம் என்று கண்டுபிடிக்க முடியாத பிரமாண்டம் பிரமிப்பூட்டுகிறது. இத்தனைக்கும் இடையில் கணவன், மனைவி நெருக்கம், தந்தை மகன் உறவு, காதல் என்று சென்டிமென்டுகளும் உண்டு.