நடிப்பு: பரத், பூர்ணா, பொன்வண்ணன், தாரா, வடிவேலு
இயக்கம்: திருமுருகன்
தயாரிப்பு: டத்தோ துரைசிங்கம் பிள்ளை, கருணாமூர்த்தி.
இசை: வித்யாசாகர்
பொன்வண்ணன், தாரா தம்பதியரின் மகன் பரத், விலங்கியல் மூன்றாமாண்டு படிக்கிறார். ஊர் பெரிய புள்ளி ‘சங்கர் குரு’ ராஜாவின் மகள் பூர்ணாவை, கல்லூரியில் பார்த்ததுமே காதல் கொள்கிறார். இருவரும் ஒரே ஜாதி என்பதால், காதல் ஒர்க்கவுட் ஆகும் என்று நினைக்கிறார்.
இதற்கிடையே ராஜாவுக்கும், இன்னொரு ஊர் பெரிய புள்ளிக்கும் ஜாதி மோதல் உண்டாகிறது. அதன் எதிரொலி, கல்லூரி தேர்தலில் மாணவர்களிடையே கலவரமாகிறது. பெரிய புள்ளிகள் ஒருவரை ஒருவர் வீழ்த்த வலை விரிக்கின்றனர்.
ஒரு சந்தர்ப்பத்தில், ‘நான் உன்னை காதலிக்கவே இல்லை’ என்று அணுகுண்டு போடுகிறார் பூர்ணா. உடைந்து போன பரத், அவரை தென்னந்தோப்புக்கு வரவழைத்து, தோழிகள் மத்தியில் செருப்பால் அறைகிறார்.
அதிர்ச்சியடைந்த பூர்ணா, தன் தந்தை ராஜாவிடம் அங்கு நடந்த விஷயத்தை மறைக்கிறார். மெல்ல மெல்ல காதல் அரும்பும் வேளையில், பரத்தின் அண்ணனைக் கொன்றவர் பூர்ணாவின் தந்தைதான் என்ற உண்மை தெரிய வருகிறது.
எல்லாமே தன் மகன்தான் என்று வாழும் பொன்வண்ணனுக்கு உண்மை தெரிய வரும்போது, பரத் என்ன முடிவு எடுக்கிறார்? பூர்ணாவின் காதலை அவர் ஏற்றுக்கொண்டாரா என்பது விறுவிறுப்பான கிளைமாக்ஸ்.
படம் முழுக்க இளமைத் துள்ளலுடன் வருகிறார் பரத். பூர்ணாவைக் கண்டு மயங்குவதும், அவரது அலட்சியப் பார்வையால் மனம் பொசுங்கி தவிப்பதும், செருப்பால் மாறி மாறி அடித்துவிட்டு, காதலுக்கு குட்பை சொல்லிவிட்டுச் செல்வதுமாக தொடர்ந்து செஞ்சுரி அடிக்கிறார்.
வடிவேலுவுடன் அவர் செய்யும் காமெடி லகலக. அப்பா, அம்மாவின் பாசத்தை உதாசீனப்படுத்துவது போல் ஏற்றுக்கொள்ளும் அந்தப் பக்குவம், அவரது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்துகிறது.
அண்ணனைக் கொன்ற ராஜாவின் வீட்டுக்குள் சென்று, அவரது கன்னத்தில் பளார் விட்டு எச்சரிக்கும்போது, ஜிவ். பாடல் காட்சிகளில் மிரட்டுகிறார்.
புதுவரவு பூர்ணா நடிப்பில் பாஸ் மார்க் வாங்குகிறார். பரத்திடம் நயமாகப் பேசுவதும், அவரது தோழர்களுக்கு பிளையிங் கிஸ் கொடுத்து மடக்குவதும் அழகு. அப்பா சொன்ன மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்டுவேன் என்று சொல்லிவிட்டு, பரத்துக்கு அல்வா கொடுப்பது, எங்கே அவர் வில்லியாகி விடுவாரோ என்று பதைக்க வைக்கிறது.
ஆனால், இடைவேளைக்குப் பிறகு பரத் மீது காதல் பார்வை வீசுவதும், அதைப் புரிந்துகொள்ளாத பரத் காதலைப் புறக்கணிப்பதும், அதைக்கண்டு பூர்ணா மருகுவதும் நான்ஸ்டாப் காதல் சரவெடி.
சாமியாடி சொரிமுத்து அய்யனாராக வரும் வடிவேலு, படத்தை கலகலப்பாக நகர்த்த பேருதவி செய்கிறார்.
வில்லன் ராஜா, கிளைமாக்ஸ் வரை சஸ்பென்ஸ் கேரக்டராக இருந்து அதிர்ச்சி கொடுக்கும் யுகேந்திரன், பாசமுள்ள பொன்வண்ணன், தாரா இவர்கள் கேரக்டர்களோடு வாழ்ந்திருக்கிறார்கள்.
குடும்பத்துடன் பார்க்கும்படி உணர்ச்சிகரமான கதையை எழுதி, திடீர் திருப்பங்களுடன் இயக்கிய திருமுருகனை பாராட்டலாம். பாஸ்கர் சக்தியின் வசனம், வித்யாசாகரின் இசை, வைரமுத்துவின் வரிகள் மனதை வருடுகிறது. வைத்தியின் கேமரா, தென்னந்தோப்பின் பசுமையை அள்ளுகிறது.
நீள நீளமான வசனங்கள், திடீரென்று மெதுவாக நகரும் திரைக்கதை இவற்றை கொஞ்சம் கவனித்திருந்தால் முனியாண்டி இன்னும் கவர்ந்திருப்பார்.