நடிப்பு: பார்த்திபன், சாயாசிங், ஆனந்தராஜ், கருணாஸ்.
இயக்கம்: மதுமிதா.
தயாரிப்பு: நளினி சுந்தர்ராமன், திரிசக்தி சுந்தர்ராமன்.
இசை: பரத்வாஜ்.
காதலனை மறக்கமுடியாமலும், கணவனை ஏற்றுக்கொள்ள முடியாமலும் தவிக்கிற பெண்ணின் தவிப்பும் அவள் எடுக்கும் புதுமையான முடிவும்தான் கதை.
சாயாசிங்கிற்கு ஸ்ரீகாந்த் மீது காதல். காதலுக்கு அப்பா ஆனந்தராஜ் வில்லன். சென்டிமென்ட் டச் கொடுத்து பார்த்திபனுக்கு கட்டாய திருமணம் செய்து வைக்கிறார். இருவரும் சென்னைக்கு தனிக்குடித்தனம் வருகிறார்கள். காதலனை நினைத்து உருகி கணவனை வெறுத்து ஒதுக்கி அதகளம் பண்ணுகிறார் சாயாசிங்.
எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு. அவளின் அன்பை பெற காந்தி வழியில் போராடுகிறார் பார்த்திபன். கடைசியில் மனைவி கேட்பதால் தன்னை கெட்டவனாக நீதிமன்றத்தில் காட்டிக்கொண்டு விவாகரத்தும் கொடுக்கிறார்.
தனிமையில் வசிக்கும் சாயாசிங்கிற்கு பழைய காதலன் இன்னொரு பெண்ணுடன் திருமணத்துக்கு தயாரான செய்தி கிடைக்கிறது. கணவனின் அருமையை உணருகிறார். ஆனால் அவனுடன் மீண்டும் சேர ஈகோ தடுக்கிறது. அதன் பிறகு சாயாசிங் எடுக்கும் முடிவு என்ன என்பது கிளைமாக்ஸ்.
ஜாலியான கேரக்டர்களில் ஆட்டம்போட்டுக்கொண்டிருந்த சாயாசிங்கின் தலையில் வெயிட்டான கேரக்டரை சுமக்க விட்டிருக்கிறார்கள். அவரும் தலைசாயாமல் சுமக்கிறார். மூக்கு விடைக்க கண்கள் சிவக்க பார்த்திபனிடம் கொட்டும் அக்னி வார்த்தைகளில் சூடுபறக்கிறது.
காதலன் தன்னை மறந்த செய்தி கேட்டு தனிமையில் உட்கார்ந்து அழும் காட்சியில் உருக வைக்கிறார். பார்த்திபன் தனது அக்மார்க் வசனங்களுடனும், சோகத்தில் பூக்கும் சிரிப்புடனும் பரிதாபத்தை அள்ளுகிறார். கருணாஸ் அண்ட் கோவின் மெக்கானிக் ஷெட் கலாட்டாக்கள் கலகலப்பூட்டுகிறது.
தனிமையில் வசிக்கும் சாயாசிங்கிற்கு துணையாக வரும் வேலைக்காரி தேவிப்ரியா கேரக்டரின் திடீர் திருப்பம், நீதிமன்ற காட்சிகளில் வாதத்துக்கு பொருத்தமான காட்சிகளிலியே சூழ்நிலையை விளக்குவது, யூகிக்கும் கிளைமாக்சிலிருந்து விலகி நிற்பது போன்றவற்றில் டைரக்டர் டச்! இசை அமைப்பாளர் பரத்வாஜும், ஒளிப்பதிவாளர் ராஜராஜனும் படத்துக்கு வல்லமை சேர்த்திருக்கிறார்கள்.
படத்தின் வேகத்திலும், திரைக்கதை அமைப்பிலும் வல்லமை குறைவு. குத்துப்பாட்டும், ரெட்டை அர்த்த வசனமும் இல்லாமல் ஒரு படம் கொடுத்திருப்பதற்காக அறிமுக இயக்குனர் மதுமிதாவை பாராட்டலாம்.