நடிப்பு : ஜெயம் ரவி, ஜெனிலியா,பிரகாஷ்ராஜ், கவுசல்யா, கீரத்.
தயாரிப்பு : ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட்ஸ்.
டைரக்ஷன் : எம்.ராஜா.
இசை : தேவிஸ்ரீ பிரசாத்.
விமர்சனம்
ஜெயம் ரவியை கண்டிப்போடு வளர்க்கும் தந்தை பிரகாஷ்ராஜ், கீரத்துடன்
திருமணம் நிச்சயிக்கிறார். கல்யாணத்தை தன் விருப்பப்படி செய்ய
நினைக்கும் ஹீரோ, ஜெனிலியாவை கண்டதும் காதல் கொள்கிறார்.
விஷயம் பிரகாஷ்ராஜுக்கு தெரிய வர வழக்கம் போல் கத்தல். ‘பெண்ணை
நிச்சயித்த பிறகு வேறு பெண்ணை காதலிப்பது தவறு, ஜெனிலியாவை நம்
வீட்டுக்கு அழைத்து வந்து 7 நாள் தங்க வை. வீட்டில் உள்ளவர்களுக்கு
பிடித்தால் கட்டி வைக்கிறேன்’ என்கிறார்.
சவாலை ஏற்கும் ரவி, ஜெனிலியாவுடன் வருகிறார். அவரது சுட்டித்தனம்
குடும்பத்தாரை கவர்கிறது. ஆனால் ரவியை சிக்கலில் மாட்டி விடுகிறது.
மனம் நொந்த ஜெனி வீட்டிலிருந்து வெளியேறுகிறார். பிரிந்த ஜோடி
இணைகிறதா? ஏற்கெனவே நிச்சயித்த கீரத் கதி என்ன? என்பதற்கு
நெகிழ்ச்சியான விடையை சொல்கிறது கிளைமாக்ஸ்.
காதலுக்கு ஏங்கும் ஹீரோ 'ஜெயம்' ரவி, கண்டிப்பு தந்தை பிரகாஷ்ராஜ்,
வெகுளித்தனத்தை விட்டால் வேறெதுவும் தெரியாத ஜெனிலியா என
இவர்களைச் சுற்றித்தான் சுழல்கிறது கதை. டி-ஷர்ட் மாட்டிவரும்
ரவியிடம் 'அது நல்லாயில்ல; இந்த சட்டய போட்டுகிட்டு வா' என்று ஒரே
வார்த்தையில் பிரகாஷ் அடக்கிப்போடும் முதல் காட்சியிலேயே கேரக்டரின்
பிடிவாதம் தெரிந்துவிடுகிறது.
குடும்பத்துக்கு அடங்கி நடக்கும் ரவி, நண்பர்களுடன் செய்யும் அலப்பறையில்
அல்லோகல்லப்படுகிறது அரங்கு. பெண் பார்க்க சென்ற இடத்தில் கீரத்திடம்
தனிமையில் பேசுவதும், 'உங்களப் பத்தி அப்பா சொன்னார்' என்று தொடங்கி
வார்த்தைக்கு வார்த்தை 'அப்பா சொன்னார்', 'அப்பா சொன்னார்' என்று கீரத்
சொல்லும்போது, இதுவும் அப்பா வளர்ப்புதான் என ரவி நொந்துபோவதும் லக லக.
ஜெனிலியாவின் மின்னல் என்ட்ரியால் காட்சிகள் களைகட்டுகிறது. துள்ளல்
நடை போடும் ஜெனி, போகிறபோக்கில் ரவியின் நெற்றியில் எதிர்பாராமல்
முட்டியதும், மீண்டும் ஒரு முட்டு முட்டிவிட்டு 'ஒரு முட்டோடு நிறுத்தினா
தலையில கொம்பு முளைக்கும்; அதனாலதான் இன்னொரு முட்டு' என்று
குறுகுறுக்கும்போதே மனதுக்குள் பச்சக் ஆகிறார்.
ரவியின் வீட்டுக்கு ஜெனி வந்ததும் இரண்டாவது பகுதி ரகளை தொடங்குகிறது.
'நண்பர்களுடன் தண்ணி அடிப்பார்', 'நடுஇரவில் சுவர் ஏறி குதிப்பார்', 'தண்ணி
போட்டுவிட்டு தந்தையை கெட்ட வார்த்தையில் திட்டுவார்' என ரவியின் ரகசியங்களை
குடும்பத்தாரிடம் வெள்ளந்தியாக ஜெனிலியா போட்டுடைத்ததும் சிதறு தேங்காய்
ஆகும் ரவியின் தவிப்பு டாப்.
'என்னை காதலிக்கிறதுக்கு முன்னாடி எங்கிட்ட எதெல்லாம் பிடிச்சதோ
அதெல்லாம் காதலிச்ச பிறகு பிடிக்கலைன்னு சொல்றான். நான் சந்தோஷ§க்கு
ஏத்த பெண் இல்ல' என்றபடி கண்ணீருடன் வெளியேறும்போது சந்தோஷங்களையும்
கூடவே எடுத்துச் செல்கிறார் ஜெனி.
டூர் போவதாக பொய் சொல்லி ஜெனிலியாவை ரவியின் வீட்டுக்கு அனுப்பிவிட்டு
அவரது தந்தை சாயாஜி ஷிண்டேயிடம் சிக்கிக்கொள்ளாமல் இருக்க மாறுவேடத்தில்
திரியும் எம்.எஸ்.பாஸ்கர் வயிற்றை பதம் பார்க்கிறார். சந்தானம், சத்யன், பிரேம்ஜி,
ஸ்ரீநாத் என ரவியின் சக நண்பர்களும் நகைச்சுவை பந்தி வைக்கின்றனர்.
தன்னை மீண்டும் நிருபித்திருக்கிறார் டைரக்டர் ராஜா. பிரகாஷ்ராஜ்-ரவியின்
மோதலுக்கு முடிவு சொன்ன பிறகும் கிளைமாக்ஸை முடிக்காமல் கீரத்தின்
நிச்சயதார்த்தத்தை ரத்து செய்வது, சாயாஜியை சமாதானம் செய்வது, ஜெனிலியாவை
திருமணத்துக்கு சம்மதிக்க வைப்பது என கதை நீள்வது சோர்வு. தேவி ஸ்ரீ
பிரசாத்தின் இசை, டி.கண்ணனின் ஒளிப்பதிவு படத்துக்கு பலம் சேர்க்கின்றன.