நடிப்பு: தனுஷ், நயன்தாரா, கார்த்திக், ரகுவரன்.
இசை: யுவன்ஷங்கர் ராஜா.
தயாரிப்பு: கஸ்தூரி ராஜா
இயக்கம்: மித்ரன் ஜவஹர்.
விமர்சனம்
தெலுங்கில் செல்வராகவன் இயக்கிய 'ஆடவரி மாடலாகு அர்த்தலே வேறுலே'
படத்தின் ரீமேக்தான் 'யாரடி நீ மோகினி'.
5 ஆண்டுகளாக வேலை தேடி அலைகிறார் தனுஷ். இதற்கிடையே நயன்தாராவை
பார்க்கிறார். முதல் பார்வையிலேயே காதல். தொடர்ந்து செல்கிறார். அவர்
பணிபுரியும் சாஃப்ட்வேர் நிறுவனத்திலேயே தானும் பணிபுரிய முடிவெடுத்து
அங்கு நடக்கும் நேர்முகத் தேர்வில் கலந்துதேர்ச்சி பெறுகிறார்.
வேலை விஷயமாக நயன்தாராவுடன் ஆஸ்திரேலியா செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது.
அங்கு தனது காதலை வெளிப்படுத்துகிறார். ஆனால் தனக்கு அடுத்த மாதம்
திருமணம் என அதிர்ச்சி கொடுக்கிறார் நயன்.
காதல் தோல்வியால் தனுஷ் படும் அவஸ்தையை பார்க்க முடியாத அப்பா ரகுவரன்,
நயனிடம் பேசுகிறார். ஆனால் நயன் அவரை அவமானப்படுத்துகிறார்.
மனமுடையும் ரகுவரன் இறக்கிறார்.
அப்பாவின் நினைவில் வாடும் தனுஷ§க்கு ஆறுதலாக இருக்கிறார் நண்பரான
கார்த்திக். தனது திருமணத்துக்காக தனுஷை சொந்த ஊருக்கு அழைத்துச்
செல்கிறார்.
கார்த்திக்கின் மனைவியாகப் போகிறவர் நயன்தாரா என்பதை அறிந்து அதிர்கிறார்
தனுஷ். அடுத்து என்ன என்பதை சொல்லி முடிக்கிறது படம்.
பொல்லாதவனில் ஆக்ரோஷமான இளைஞராக பார்த்த தனுஷ், இதில் சாஃப்ட்.
ரகுவரனுடன் அடிக்கடி வாய்ச் சண்டை போடுவது, வேலை கிடைத்துவிட்டது
என சொல்லிவிட்டு 'வாப்பா காபி சாப்பிடலாம்' என ஓட்டலுக்கு அழைத்து
செல்வது, நயன்தாரா பார்க்கிறார் என்பதற்காக நல்லவனாக நடிப்பது,
ரகுவரனை கேவலமாக நயன் பேசியதும் கொதித்து எழுவது என சராசரி
இளைஞனின் காதல், பாசம், கோபத்தை கண்முன் கொண்டு வருகிறார் தனுஷ்.
நயன்தாராவுக்கு இதில் கிளாமருக்கு வாய்ப்பில்லை. நடித்திருக்கிறார். தனுஷ்
மீது காதல் பிறக்கும்போது தனது தங்கை, தனுஷை விரும்புவதால் கடுப்பாவது,
காதலை மறைக்க முடியாமல் தவிப்பது என பல இடங்களில் நயனால் பயன்.
சில காட்சிகளிலேயே வந்துபோனாலும் இதயங்களை கனமாக்கிவிட்டு
செல்கிறார் ரகுவரன். 'நீ என் மேல இவ்வளவு பாசம் வச்சிருக்கியாடா?' என
தனுஷிடம் கேட்கும் அந்த ஒரு வசனம் போதும், ரகுவின் நடிப்புக்கு.
'கண்ட நாள் முதல்' கார்த்திக், கருணாஸ் சீரியசான நண்பர்கள்.
தனியே காமெடி டிராக் இல்லாமல் காட்சிகளுடன் பயணிக்கும் ஹியூமர்தான்
படத்தின் ஹைலைட். நயன் வீட்டுக்கு விருந்தாளியாக தனுஷ் செல்ல,
அங்கு நயனின் தங்கை அவரை சைட் அடிப்பது இந்தி படங்களில் பார்த்தது
என்றாலும் இதில் அது தனி சுவை.
தனுஷை விரட்டி விரட்டி அடிக்க வரும் பாட்டி சுகுமாரியின் காட்சிகளும்
மனதில் ஒட்டுகிறது. பெண்களுடன் ஷாப்பிங் சென்று தனுஷ் படும் அவஸ்தை,
குபீர் ரகம். திடீரென வரும் அந்த மார்க்கெட் சண்டை படத்துடன்
ஒட்டவில்லை. நீண்டு கொண்டு செல்லும் க்ளைமாக்ஸ் சலிப்பு.
ஜவஹரின் இயக்கம், சித்தார்த்தின் ஒளிப்பதிவு கச்சிதம். யுவன் ஷங்கர்
ராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்திலும் மெலடி மணம்.
(Posted by Dharmendar, August 30, 2008, 9:41 AM)