நடிகர்கள் : பிரசன்னா, காவ்யா மாதவன்,அப்பாஸ், கருணாஸ்,
எம்.எஸ்.பாஸ்கர்
தயாரிப்பு : அஜய் சந்திரன்
இயக்கம் : சித்திக்
இசை : தீபக் தேவ்
விமர்சனம்
வங்கி ஒன்றில் ரூ.20 கோடியை, தம்பியுடன் சேர்ந்து கொள்ளை அடிக்கிறார்
அப்பாஸ். அவர்களை போலீஸ் சுற்றி வளைத்ததும் வங்கிக்கு வந்த மாணவி
ஒருவரை சுட்டுத்தள்ளி, கொள்ளையடித்த பணத்துடன் தப்புகின்றனர்.
இந்நிலையில் அப்பாஸின் தம்பி என்று சொல்லிக்கொண்டு டி.வி. நிகழ்ச்சி
தொகுப்பாளர் காவ்யா மாதவனிடம் அறிமுகமாகிறார் பிரசன்னா. அவரது
நடவடிக்கை வித்தியாசமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைகிறார்
காவ்யா.
இதற்கிடையில் அமெரிக்காவுக்கு சென்ற அப்பாஸ், தம்பியை பார்க்க இந்தியா
வருகிறார். அப்போதுதான் தனது தம்பி பெயரை பயன்படுத்தி பிரசன்னா நாடகம்
ஆடிய விவரம் தெரிகிறது. இந்நிலையில் தனது தங்கையை சுட்டுக்கொன்றதற்காக
அப்பாஸை பழி வாங்க முயற்சிக்கிறார் பிரசன்னா. அவரது முயற்சி ஈடேறியதா
என்பதே கிளைமாக்ஸ்.
ஆக்ஷன், சஸ்பென்ஸ், காமெடி என புதுவித கலவையுடன் பரபரக்கிறது படம்.
சாக்லெட் பாய் என்ற முத்திரையை உடைத்திருக்கிறார் பிரசன்னா. ரவுடி
மனோஜ் கே.ஜெயனை தேடி வரும் பிரசன்னா, அங்கு கனல் கண்ணன் கோஷ்டியை
நையப் புடைப்பதில் ஆக்ஷன் ஹீரோ ஆவதுடன், அடுத்த நொடியே 'அண்ணே,
அண்ணே' என்று அப்பாவித்தனமாக பேசி நடிப்பில் வித்தியாசப்படுகிறார்.
அடுத்து என்ன காட்சி வரும் என்று யூகிக்க முடிகிறது என்றாலும், கதையின்
ஓப்பன் சஸ்பென்ஸ் சுவாரஸ்யத்தைக் கூட்டுகிறது.
பாசமுள்ள அண்ணனாக, காவ்யாவின் பார்வையில் சாதுவாக, அப்பாஸைக்
கொல்ல அலையும் வெறிகொண்ட மிருகமாக பல பரிமாணங்களை வெளிப்படுத்தி,
நடிப்பில் மிரட்டுகிறார் பிரசன்னா. காவ்யாவிடம், ‘நிஜமா சொல்றேன். உன்
கண்ணு ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது’ என்று காதல் வசப்படுவது டச்சிங்.
கார்த்திக், ரகுவரன், ஜனகராஜ் குரலில் மிமிக்ரி செய்யும் பிரசன்னா, கோட்டா
சீனிவாசராவிடம் சிவம், சுந்தரம், மூர்த்தி ஆகிய பெயர்களில் கண்ணாமூச்சி
விளையாடுவது காமெடி.
ஆழமான, அகலமான கண்களில் கவிதை வாசிக்கிறார் காவ்யா. அப்பாஸையும்
நம்ப முடியாமல், பிரசன்னாவையும் நம்ப முடியாமல் தவிக்கும்போது பரிதாபத்தை
அள்ளுகிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அப்பாஸ் வில்லனாக விஸ்வரூபம்
எடுத்திருக்கிறார்.
படத்தின் பெரிய பலம், ஆரோக்கியமான காமெடி கூட்டணி. எம்.எஸ்.பாஸ்கர், கருணாஸ்,
சார்லி,வையாபுரி குழுவினரின் யதார்த்தமான காமெடி, வயிற்றைப் பதம் பார்க்கிறது. ‘ஏலே
சாத்தாங்குளம் கானா வானா மாணிக்கம்னா என்னல நினைச்சே..., ஏ...சவத்து மூதி’ என்று எம்.எஸ்.
பாஸ்கர் பண்ணும் நெல்லை தமிழ் அலப்பறையில் அதிர்கிறது தியேட்டர். அவரிடம் கடன்
வாங்கிவிட்டு தவிக்கும் கருணாஸ், ரோட்டைப் பார்த்தாலே ராக்கெட் வேகத்தில் ஓடுவது காமெடி
வெடி. பாஸ்கர் எதைச் சொன்னாலும் நேர்மாறாகப் புரிந்துகொண்டு செயல்படும் சார்லியின் காமெடி
குபுக்.
அமைச்சர் கோட்டா சீனிவாசராவை காமெடி வில்லனாக்கியிருக்கிறார்கள். வங்கியில்
நடந்த கொள்ளையில் சம்பந்தப்பட்ட அவரை போலீஸ் மற்றும் அரசாங்கம் கண்டு
கொள்ளாதது சினிமாத்தனம். தீபக் தேவ் பின்னணி இசை அசத்தல். கோகுலகிருஷ்ணாவின்
வசனம், சலசல. கிளைமாக்ஸ§க்கு முன்னால் வரும் பாடல் தேவையற்ற திணிப்பு.