header Home | Set as homepage | Add to favorites |
Search the Site   Advanced Search »

Sections
Archive
Su Mo Tu We Th Fr Sa
123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Newsletter
Subscribe to newsletter:



email Email to a friend | print Print version | comment Comments (0 posted)

எம்.என்.நம்பியார் காலமானார்

By on November 19,2008

image

 

தமிழ் திரையுலகில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக கலைப்பணியாற்றி வந்த பழம்பெரும் நடிகர் எம்.என்.நம்பியார் (வயது 89) காலமானார்.

கடந்த ஒரு வருடமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சென்னையிலுள்ள வீட்டில் இன்று மதியம் 1.25 மணியளவில் மரணமடைந்தார். அவருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

சென்னை - கோபாலபுரத்தில் உள்ள வீட்டில் நம்பியார் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நடிகர், நடிகைகள், அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அர்ப்பணிப்பின் மறுவுருவம்!

கேரள மாநிலம் மஞ்சேரியில் 1919-ம் ஆண்டு மார்ச் 7-ம் தேதி பிறந்தவர் எம்.என்.நம்பியார். சுட்டியாய் சுற்றித் திரிந்த காலத்திலேயே நடிப்பு என்ற உன்னதக் கலை மீது தீராத பற்று கொண்ட இவர், தனது 13வது வயதிலேயே கலையுலகில் காலடியெடுத்து வைத்துவிட்டார்.

நாடக உலகில் தனது கலைப்பணிகளைத் துவக்கிய அவர், பின்னர் சினிமா உலகிற்கு 1935-ம் ஆண்டு தமிழ், இந்தி மொழிகளில் தயாரான 'பக்த ராமதாஸ்' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே 'வில்லன் வேடமேற்றார்.

துவக்கம் முதலே 'நடிப்பு' என்ற கலையில் நூறு விழுக்காடு ஈடுபாடு கொண்டிருந்த அவர், இறுதிவரை அர்ப்பணிப்பு எள்ளளவும் குறையாமல் கலைப்பணியாற்றினார்.

டி.எஸ்.பாலையா, எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் தொடங்கி இன்றைய விஜய், அஜீத் வரை திரையுலகில் 1000-க்கும் மேலான படங்களில் நடித்து ஏழு தலைமுறைகளைக் கண்டவர், நம்பியார்.

நிழலில் வில்லன்; நிஜத்தில் நாயகன்!

தமிழ் திரையுலகில் எம்.ஜி.ஆர். என்ற பெயரை உச்சரிக்கும் ஒவ்வொரு ரசிகருக்கும், அனிச்சையாக மனதில் தோன்றும் மற்றொரு பெயர் 'நம்பியார்' என்பதை எவராலும் மறுக்க முடியாது.

தமிழ் சினிமாவில் வில்லன் கதாப்பாத்திரத்திற்கே ஒரு தனித்துவத்தையும், சிறப்பினையும் பெற்றுத் தந்தவர். திரைப்படங்களில் தனது வில்லத்தனத்தால் ரசிகர்களுக்கு எரிச்சல் ஊட்டியவர். குறிப்பாகப் பெண்களிடையே கடுமையான வெறுப்பையும், அதிருப்தியையும் சம்பாதித்துக் கொண்டவர்... அந்த வெறுப்புகளும், அதிருப்திகளும் தான் எதிர்மறைக் கதாப்பாத்திரங்களைச் செய்யும் நடிகர்களுக்கு போடப்படும் மதிப்பெண்கள். ஆம்... இதுவே ஒரு மகா கலைஞனின் மிகச் சிறப்பான வெற்றி.

'ஆயிரத்தில் ஒருவன்', 'உத்தம புத்திரன்', 'அம்பிகாபதி', எங்க வீட்டு பிள்ளை', 'சர்க்கரவர்த்தி', 'பாசமலர்', 'அன்பே வா'... என எம்.என்.நம்பியாரின் நடிப்பாற்றலைப் பற்றி பேசப்பட்ட படங்களை அடுக்கினால், அதை மட்டும் ஒரு தகவல் களஞ்சியமாக வெளியிட வேண்டியிருக்கும்.

தமிழ் திரைப்படங்கள் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் (வில்லியம் ப்ரூக் இயக்கி 1952-ல் 'ஜங்கிள்' என்ற ஆங்கிலப் படத்தில் நடிகர் ரோட் கேமரோனுடன் இணைந்து நடித்தார்) என பல மொழிகளிலும் தடம்பதித்தவர்.

2000-க்குப் பிறகு இவர் குணச்சித்திர வேடங்களில் நடித்த படங்களில் 'பூவே உனக்காக, 'பூவெல்லாம் உன் வாசம்', 'பாபா' போன்றவை குறிப்பிடத்தக்கவை.

தமிழ் சினிமாவில் வில்லன் கதாப்பாத்திரத்தில் வெகுவாக வலம் வந்தவர் என்றாலும், நிஜ உலகில் நம்பியார் ஒரு நாயகனே!

பணம், புகழ், செல்வாக்கு... மனிதனை மயக்க வல்ல இத்தகைய நிலைகளால் எப்போதும் அடிமையாகாத உன்னத மனிதர்தான், எம்.என்.நம்பியார்.

புகை, மது என எவ்வித தீயப் பழக்கங்களும் இவரை எப்போதும் தீண்டியதில்லை.

உடலையும், உள்ளத்தையும் ஒருங்கே பேணுவதில் சிறந்தவர். நடிப்புக் கலை ஒரு கண் என்றால், ஆன்மிகத் தேடல் மற்றொரு கண். சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு 65 ஆண்டுகளாக தவறாமல் சென்று வணங்கிய பெருமைக்குரியவர். இதனாலேயே அவரை, 'மகா குருசாமி' என்றே அனைவரும் அழைப்பர். சினிமா உலகில் 'புனிதர்' என்று எம்.என்.நம்பியாரை அழைப்பது சாலப் பொருந்தும் என்பது சக கலைஞர்கள் பலரது கருத்து.

வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்த நடிகர் எம்.என்.நம்பியாரிடம் ஒரு முறை கேட்கப்பட்டது... நீங்கள் பெற்ற விருதுகளில் உயர்வாக எதைக் கருதுகிறீர்கள்?

அவரது பதில்.... 'நல்லவன் என்கிற விருது!'

 

Your Ad Here

905 times read

Did you enjoy this article?

1 2 3 4 5 Rating: 5.00Rating: 5.00Rating: 5.00Rating: 5.00Rating: 5.00 (total 6 votes)
comment Comments (0 posted)
Most Popular
Most Commented
Most E-mailed