'மின்னலே' படம் மூலம் ஹாரிஸ் ஜெயராஜை இசை அமைப்பாளராக அறிமுகப்படுத்தினார் டைரக்டர் கவுதம் மேனன். இருவரும் இணைந்து பணியாற்றினர். இந்நிலையில் திடீரென்று இருவரும் பிரிந்தனர். இதுபற்றி ஹாரிஸ் ஜெயராஜ் கூறியதாவது:
'வாரணம் ஆயிரம்' படத்துக்கான மெட்டமைக்கும் பணியை ஒரு வருடத்துக்கு முன்பு கேரளாவில் உள்ள குமரகத்தில் மேற்கொண்டோம். 'அடியே கொல்லுதே..' என்ற பாடலுக்கு மெட்டமைத்தபோது எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அப்போதே இதிலிருந்து விலகி விட நினைத்தேன். ஒப்புக்கொண்ட படத்திலிருந்து திடீரென்று விலகுவது சரியில்லை என்று மனசாட்சிக்கு கட்டுப்பட்டு தொடர்ந்து பணியாற்றினேன். படத்தை முடித்துவிட்டு விலகலாம் என்று முடிவு செய்தேன்.
ஒன்றிரண்டு பாடல்கள் கம்போஸ் செய்தபோது ஸ்டூடியோவில் கவுதம் இல்லை. பின்னர் அந்த பாடல்களை திரையில் பார்த்துவிட்டு பிரமாதமான மெட்டுக்கள் என்று எஸ்.எம்.எஸ். அனுப்பினார்.
பொதுவாக ஒரு படத்துக்கு பணியாற்றும்போது இருவரும் கலந்தாலோசிப்பது வழக்கம். தயாரிப்பு நிறுவனம், நடிகர் நடிகை, பாடல், ஸ்கிரிப்ட் என எல்லா அம்சங்களையும் மனம் விட்டு பேசுவோம். எங்களுடன் மொத்த குழுவினரும் இருப்பார்கள். ஆனால் இப்போது அப்படி இல்லை. சமீபகாலமாக கவுதம் போக்கில் மாற்றம் ஏற்பட்டது. சில முடிவுகளை அவர் தன்னிச்சையாக எடுத்துள்ளார்.
எனக்கு சொல்ல வேண்டிய விஷயங்களை நேரடியாக சொல்லாமல் இன்னொருவர் மூலமா சொன்னார். இதுபற்றி கவுதமிடம் கேட்டபோது எந்த பதிலும் சொல்லவில்லை. எங்களுக்குள்ளான உறவு இதனால் பலகீனம் அடைந்தது.
ஒரு வருடத்துக்கு 30 முதல் 40 ஸ்கிரிப்ட் கேட்கிறேன். அதிலிருந்து 3 அல்லது 4 படங்கள் மட்டுமே தேர்வு செய்கிறேன். பெரிய இயக்குனர்கள், பெரிய நடிகர்கள் படங்களை கூட சில நேரம் வேண்டாம் என்று மறுத்திருக்கிறேன். ஆனால் கவுதம் அல்லது ஜீவா படங்கள் என்றால் மறுத்தது இல்லை. காரணம் அவர்கள் மீதான நம்பிக்கைதான்.
அதே நம்பிக்கையை அவர் (கவுதம்) என்னிடமும் வைத்திருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவரிடம் அதை காண முடியவில்லை. அதன் விளைவுதான் இந்த பிரிவு. இந்த முடிவை தனிப்பட்ட முறையில் நான்தான் எடுத்தேன். பிறகுதான் அவருக்கு தெரியப்படுத்தினேன்.
'வருங்காலத்தில் இருவரும் சேர்ந்து பணியாற்றுவீர்களா?' என்றால் அதற்கு நிச்சயம் வாய்ப்பில்லை.
(Posted by Halith, November 22, 2008, 5:00 AM)