'கோடிகளில் செலவு செய்து படம் எடுத்தாலும் ரசிகர்களை ஏமாற்ற முடியாது' என்றார் இயக்குனர் பேரரசு.
ஸ்ரீகாந்த், நவ்யா நாயர் நடிக்கும் படம் 'ரசிக்கும் சீமானே'. முதலில் இப்படத்துக்கு 'எட்டப்பன்' எனப் பெயரிடப்பட்டிருந்தது.
அதற்கு எட்டப்பன் வம்சாவளியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் 'ரசிக்கும் சீமானே' என மாற்றப்பட்டது. திருமலை தயாரிக்கிறார். வித்யாதரன் இயக்குகிறார். விஜய் ஆண்டனி இசை அமைக்கிறார். இப்படத்தின் பாடல் கேசட்டை பேரரசு வெளியிட, ஜனநாதன் பெற்றுக்கொண்டார்.
பிறகு பேரரசு பேசியதாவது:
திரையுலகம் இப்போது ஆரோக்கியமாக இருக்கிறது. 10 வருடத்துக்கு முன் சினிமா தியேட்டர்களை இடித்து கல்யாண மண்டபம் கட்டப்பட்டது. இப்போது மண்டபங்கள் இடிக்கப்பட்டு தியேட்டர்களாக்கப்படுகிறது.
இன்றைய தினம் தயாரிப்பாளர்கள் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. கார்ப்பரேட் கம்பெனிகள் பட தயாரிப்பு பணியில் ஈடுபடுகின்றன. ஆனால் ஹீரோக்கள்தான் பற்றாக்குறை. படங்கள் அதிகளவில் தயாராகிறது. ஆனால் தியேட்டர்கள் பற்றாக்குறையாக இருக்கிறது. இதுவே திரையுலகம் ஆரோக்கியமாக இருப்பதற்கு உதாரணம்.
இப்போது ரசிகர்களை யாரும் ஏமாற்ற முடியாது. பெரிய பெரிய விளம்பரங்கள் செய்தும், கோடிகளில் செலவு செய்து படம் தயாரித்தும், யாரைக் காட்டியும் ஏமாற்ற முடியாது. ரசிகர்கள் தெளிவாக இருக்கிறார்கள்.
கதை நன்றாக இருந்தால் மட்டுமே படம் பார்க்கிறார்கள். சிறந்த கதையுடன் சிறிய பட்ஜெட்டில் படம் வந்தாலும் அதை பெரிய அளவில் வெற்றி பெறச் செய்கிறார்கள். 'ரசிக்கும் சீமானே' டைட்டில் இனிமையாக உள்ளது.
இவ்வாறு பேரரசு பேசினார்.
விழாவில் ஸ்ரீகாந்த், போஸ் வெங்கட், நடிகைகள் நீலிமா ராணி, கவுசல்யா, பாடலாசிரியர்கள் அண்ணாமலை, ப்ரியன், ஆண்டாள் பிரியதர்ஷினி, இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். டைரக்டர் வித்யாதரன் தொகுத்து வழங்கினார்.