"குசேலன்' படத்தில் நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பற்றி பேசும் வசனங்கள், ரசிகர்களின் அதிருப்தியால் நீக்கப்பட்டுள்ளது.
"குசேலன்' படத்தில் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் அசோக் குமார் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
கதைப்படி, ஒரு காட்சியில் நடிகர் ஆர்.சுந்தர்ராஜன் ""அரசியலுக்கு வருவீர்களா? வரமாட்டீர்களா? என்று கேட்டால் மேலே கை காட்டுறீங்க.. எப்ப வருவேன்; எப்படி வருவேன்னு தெரியாது என்று எல்லோரையும் குழப்புறீங்க... அரசியலுக்கு வருவீங்களா? வரமாட்டீங்களா..?'' என ரஜினிகாந்திடம் கேள்வி கேட்பார்.
அதற்கு ரஜினிகாந்த், ""சினிமாவில் யாரோ எழுதிக் கொடுத்த வசனத்தைப் பேசினேன். அதை சீரியஸô எடுத்துக்கிட்டா நான் என்ன செய்வது? நான் அரசியலுக்கு வருவேன், வரல... அதுபற்றி உங்களுக்கு என்ன கவலை? உங்கள் வேலை என்னவோ அதைப் பாருங்க..'' என்று பதிலளிப்பார். இதுவரை ரஜினி, தான் நடித்த படங்களில் பேசிய வசனங்களை, பஞ்ச் டயலாக்குகளை ரசித்தும் அவற்றை ரஜினியின் நிஜ வாழ்வுடன் பொருத்தியும் மகிழ்ந்த ரசிகர்களுக்கு "குசேலன்' படத்தில் ரஜினி பேசிய இந்த வசனங்கள் வருத்தம் அளித்தன.
மேலும் இந்த வசனங்களைக் குறிப்பிட்டு ரஜினிகாந்தின் நிலைப்பாட்டை பலர் கண்டனத்துக்குள்ளாக்குவதும் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
எனவே, தங்கள் மனம் புண்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த வசனங்களை "குசேலன்' படத்திலிருந்து நீக்க வேண்டும் என தமிழகத்திலுள்ள பல ரஜினி ரசிகர் மன்றங்களிலிருந்து தலைமை ரசிகர் மன்றத்துக்கு கடிதங்கள் வந்தன.
ரசிகர்களின் வேண்டுகோள் ரஜினியிடம் தெரிவிக்கப்பட்டது. உடனே ரஜினிகாந்த், இயக்குநர் பி.வாசுவைத் தொடர்புகொண்டு படத்தில் இடம்பெறும் அரசியல் வசனங்களை நீக்குவது குறித்து ஆலோசித்தார். இறுதியில் ரசிகர்களின் விருப்பத்துக்கு ஏற்ப குறிப்பிட்ட அரசியல் வசனங்களை நீக்க முடிவெடுக்கப்பட்டது.
இந்தத் தகவல் "குசேலன்' படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளுக்குத் தெரிவிக்கப்பட்டு புதன்கிழமை மாலை முதல் ரசிகர்களை அதிருப்தி அடையச் செய்த அரசியல் வசன காட்சி நீக்கப்பட்டது.
(Posted by siva, August 15, 2008, 7:49 AM)