கடந்த ஆறு மாதங்களில் 55 படங்கள் திரைக்கு வந்தும் நான்கு படங்கள் மட்டுமே வசூல் ஈட்டியுள்ளது.
கடந்த மாதத்துடன் முடிந்த அரையாண்டில் 55 நேரடி தமிழ் படங்கள் வெளியாகி உள்ளது. 32 மொழிமாற்று படங்கள் வெளிவந்தன. தமிழ்ப் படங்களில் ‘யாரடி நீ மோகினி', 'அஞ்சாதே' படங்கள் தயாரிப்பாளர், விநியோகஸ்தர், தியேட்டர் அதிபர்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்துள்ளது.
இதையடுத்து 'சந்தோஷ் சுப்ரமணியம்', 'சண்டை' படங்கள் லாபத்தை கொடுத்திருக்கிறது. ரூ. 4 கோடியில் உருவான 'யாரடி நீ மோகினி'யும், சந்தோஷ் சுப்பிரமணியமும் தலா 10 கோடி ரூபாய் வரையில் வசூலித்தது.
ரூ.3.5 கோடியில் உருவான 'அஞ்சாதே' ரூ. 7 கோடியும், ரூ. 3 கோடியில் தயாரான 'சண்டை' ரூ. 4 கோடியும் வசூல் செய்திருப்பதாக விநியோகஸ்தர்கள் தரப்பில் தெரிவித்தனர்.
'பீமா', 'பழனி', 'சாதுமிரண்டா', 'அறை எண் 305ல் கடவுள்', 'அரசாங்கம்', 'பிரிவோம் சந்திப்போம்' உள்ளிட்ட சில படங்கள் பெரிய அளவில் லாபம் சம்பாதிக்கவில்லை, பெரிய நஷ்டத்தையும் சந்திக்கவில்லை. 'குருவி', 'தசாவதாரம்' படங்கள் நல்ல தொடக்கத்துடன் ஓடிக்கொண்டிருக்கிறது.
'இந்திரலோகத்தில் நா.அழகப்பன்', 'நேபாளி', 'காளை' உள்ளிட்ட சில படங்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி அதை பூர்த்தி செய்ய தவறியிருந்தன. இதனால் அப்படங்கள் ஓடவில்லை. திரைக்கு வந்ததில் நான்கு படங்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. இதனால் திரையுலகம் கவலையில் உள்ளது.
தமிழ்நாடு தியேட்டர் அதிபர்கள் சங்க பொதுச் செயலாளர் பன்ன¦ர் செல்வம் கூறியதாவது:
இந்த ஆண்டு வெளிவந்த படங்களில் பெரும்பாலான படங்கள் தியேட்டர் அதிபர்களுக்கு நஷ்டத்தையே கொடுத்தது. இரு பெரிய நடிகர்கள் நடித்து வெளியான இரு படங்களை தியேட்டர் அதிபர்கள், மினிமம் கேரன்டி அடிப்படையில் திரையிட்டு நஷ்டத்தை சந்தித்தனர்.
தியேட்டர் அதிபர்களுக்கு பெரிய அளவில் லாபம் சம்பாதித்து கொடுத்தது ‘அஞ்சாதே', ‘யாரடி நீ மோகினி'யும்தான். மக்கள் இப்போது ஹீரோயிச கதைகளை விரும்புவதில்லை. வித்தியாசமான கதைகளையே விரும்புகிறார்கள். அத்தகைய படங்கள் குறைவாக வருகிறது.
அரசு என்னதான் நடவடிக்கை எடுத்தாலும் பெருகி வரும் திருட்டு விசிடி, தியேட்டர்களுக்கு பெரும் சவாலாகவே இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த ஆறு மாதங்களில் 32 மொழிமாற்று படங்கள் வெளிவந்துள்ளது. இதில் ‘டி.வார்'(ருத்ரநாகம்), ‘நார்னியா' படங்கள் விநியோகஸ்தருக்கு லாபத்தை ஈட்டிக் கொடுத்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'இண்டியானா ஜோன்ஸ்', இந்தி ‘ஜோதா அக்பர்' படங்களுக்கு வரவேற்பில்லை. சென்னை செங்கல்பட்டு திருவள்ளூர் மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் கலைப்புலி ஜி.சேகரன் கூறியதாவது:
'யாரடி நீ மோகினி', 'அஞ்சாதே', 'சந்தோஷ் சுப்ரமணியம்' போன்ற படங்கள் மட்டுமே லாபத்தை கொடுத்தது. பிரச்னை இல்லாத ஆங்கில பட வியாபாரத்தின் பக்கம் விநியோகஸ்தர்கள் திரும்பும் சூழல் உருவாகியுள்ளது.
(Posted by kavin, July 3, 2008, 4:50 PM)